சிம்லா

ந்தியாவின் முதல் வாக்காளர் சியாம் சரண் நேகி இம்முறையும் தொடர்ந்து நேற்றைய மக்களவை தேர்தல் இறுதிக் கட்டத்தில் வாக்களித்துள்ளார்.

கடந்த 1917 ஆம் வருடம் ஜூலை மாதம் 1 ஆம் தேதி பிறந்த சியாம் சரண் நேகி என்பவர் இமாசல பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் இம்மாநிலத்தில் உள்ள கினவுர் தொகுதிய சேர்ந்தவர் ஆவார். இந்திய நாடு குடியரசான பிறகு முதல் மக்களவை தேர்தல் கடந்த 1951 ஆம் வருடம் நடந்தது. அப்போது கினவுர் தொகுதி சின்னி என்னும் பெயரில் இருந்தது. இந்த தொகுதியில் அப்போது மொத்தம் 999 வாக்காளர்கள் இருந்தனர். அதில் 377 ஆண்களும் 622 பேர் பெண்களும் ஆவார்கள்.

இந்த தொகுதி வாக்காளரான சியாம் சரண் நேகி இந்தியாவின் முதல் வாக்காளர் என்னும் பெருமையை பெற்றார். அப்போது பள்ளி ஆசிரியராக பணி புரிந்த அவர் அதே தொகுதியில் வாக்குச்சாவடி பணியில் அமர்த்தப்பட்டிருந்தார். அவர் தனது வாக்கை முதல் முதலாக அன்று அளித்தார். அது முதல் இது வரை சியாம் தொடர்ந்து 16 மக்களவை தேர்தல் 13 சட்டப்பேரவை தேர்தல் மற்றும் இரு சட்டப்பேரவை இடைத் தேர்தலில் வாக்களித்துள்ளார்.

நேற்று நடந்த மக்களவை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்களிப்பின் போது சியாம் தனது 102 ஆம் வயதில் இம்முறையும் வாக்களித்துள்ளார். அவர் வாக்களிக்க வந்த போது அவரை கனவுர் தொகுதி தேர்தல் அதிகாரி நேரில் சென்று வரவேற்றார். அவரை வாக்குப்பதிவு நடக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்று வாக்களிக்க வைத்தார்.