பாஸ்போர்ட்-டில் உள்ள புகைப்படமும் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் உள்ள புகைப்படமும் ஒத்துப்போகாததால் வெளிநாடு செல்பவர்களுக்கு சிக்கல் ஏற்படுவதாக கார்த்தி சிதம்பரம் எம்.பி. நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கோவின் (Cowin) இணையதளம் மூலம் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழில் பிரதமர் மோடி படம் இடம்பெற்றிருப்பது குறித்து சர்ச்சை எழுந்ததோடு வழக்குகளும் தொடரப்பட்டன.
இருந்தபோதும், கொரோனா சான்றிதழில் இருந்து மோடியின் படம் நீக்கப்படவில்லை. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வெளிநாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கொரோனா தடுப்பூசி முழுமையாக இரண்டு டோஸ் போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று பல்வேறு நாடுகள் அறிவித்துள்ளன.
இதனால், கொரோனா சான்றிதழுடன் அந்நாடுகளுக்குச் சென்றிறங்கும் பயணிகளின் பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படமும், சான்றிதழில் உள்ள புகைப்படமும் ஒத்துப்போகாததால் விமான நிலைய அதிகாரிகளுக்கும் பயணிகளுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுவதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அவையில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 29 ம் தேதி தொடங்கியது, அமளி காரணமாக மேலவையில் இருந்து 12 காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குறித்தும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குறித்தும் குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிக்க ஆளும்கட்சியினருக்கு என்ன நடுக்கம் என்றும் காங்கிரஸ் கட்சியினர் ஏற்கனவே கேள்வியெழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் இந்த குற்றச்சாட்டு குறித்து ஆளும் பா.ஜ.க. என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது தெரியவில்லை.