நியூயார்க்
ஐநா சபைக் கூட்டத்தில் இந்தியா குறித்து வெறுப்புக் கருத்துக்களை தெரிவித்த பாகிஸ்தான் பிரதமருக்கு இந்தியச் செயலர் கடும் பதிலடி அளித்துள்ளார்.
தற்போது நியூயார்க் நகரில் நடந்து வரும் ஐநா சபைக் கூட்டத்தில் உலகின் பலநாடுகளின் தலைவர் கலந்துக் கொண்டு உரையாற்றி வருகின்றனர். இவ்வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுக்கு எதிராகப் பல வெறுப்புக் கருத்துக்களைத் தெரிவித்தார். அணுசக்தி நாடுகள் இரண்டும் மோதினால் மோசமான விளைவுகள் உண்டாகும் என அவர் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கு இந்திய வெளியுறவுத்துறை முதன்மைச் செயலர் விதிஷா மைத்ரா கடும் பதிலடி கொடுத்துள்ளார் அவர் தனது உரையில், “ “ஐநா சபையில் பாகிஸ்தான் பிரதமர் விடுத்த அணுசக்தி மிரட்டல் தலைமைப் பண்பிற்குச் சரியானதல்ல. ஐநா சபையால் தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள அல் குவைதா, ஜெய்ஷ் போன்ற பயங்கரவாத அமைப்புக்களுக்கு உலகிலேயே ஓய்வூதியம் தரும் ஒரே அரசு பாகிஸ்தான்தான் என்பதை அந்நாடு ஒப்புக் கொள்ளுமா?
தற்போது பாகிஸ்தான் பிரத்மர் இம்ரான் கான் உலக நாடுகளுக்குத் தாம் அளித்த வாக்குறுதியைப் பாகிஸ்தான் காப்பாற்றி விட்டதாகக் காட்டிக் கொள்வதற்காக, பாகிஸ்தானில் எந்த பயங்கரவாத அமைப்பும் செயல்படவில்லை என்பதைச் சரி பார்த்துக் கொள்ள ஐ.நா. கண்காணிப்பாளர்களை அழைத்துள்ளார். ஆனால் ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட 130 பயங்கரவாதிகள், ஐ.நா. கருப்பு பட்டியலில் உள்ள 25 பயங்கரவாதிகள் பாகிஸ்தான் மண்ணில் இல்லை என்பதை பாகிஸ்தான் பிரதமரால் உறுதியாகச் சொல்ல முடியுமா?
அவரை நாங்கள் வரலாறு பற்றிய தெளிவான புரிதலை ஏற்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறோம். கடந்த 1971 ல் தனது சொந்த நாட்டு மக்களுக்கு எதிராகப் பாகிஸ்தான் நடத்திய இனப்படுகொலையை மறந்து விடாதீர்கள். முன்பு கிரிக்கெட் வீரராக இருந்து பிரதமரானவரின் இன்றைய பேச்சு, முரட்டுத்தனமான துப்பாக்கி கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் விதமாக மிகவும் எல்லை மீறியதாக உள்ளது.
நிதி நடவடிக்கை குழு பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி அளிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததால் பாகிஸ்தானை எச்சரித்ததை பாகிஸ்தானால் மறுக்க முடியுமா? அல்லது முன்பு நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் இம்ரான் கான் வெளிப்படையாக ஒசாமா பின் லேடனுக்கு ஆதரவாகப் பேசியதை அவரால் மறுக்க முடியுமா?
1947 ல் 23 சதவீதமாக இருந்த பாகிஸ்தான் சிறுபான்மையினர் எண்ணிக்கை கட்டாய மதமாற்றம் போன்றவற்றால் தற்போது 3 சதவீதமாக சுருங்கி உள்ளது. அதே வேளையில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான எங்கள் இந்தியாவின் ஜனநாயகம், காஷ்மீர், லடாக் விவகாரம் ஆகியவற்றில் நடுநிலைத்தன்மையைக் கடைப்பிடித்து வருகிறது. எனவே பயங்கரவாத கொள்கைகளைத் தொழிலாகக் கொண்டு செயல்படும் எவரும் இந்திய மக்களுக்காகப் பேசத் தேவையில்லை.”எனத் தெரிவித்துள்ளார்.