அமராவதி: அக்டோபர் 1ம் தேதி முதல் ஆந்திர மாநிலத்தில் இயங்கும் 3500 மதுபானக் கடைகளை படிப்படியாக கையகப்படுத்திக் கொள்ள அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மதுவிலக்கை அம்மாநிலத்தில் அமல்படுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இதன்படி, அக்டோபர் 1ம் தேதி முதல், அம்மாநிலத்தில் இயங்கும் மதுபானக் கடைகளை, அம்மாநில அரசு நிறுவனமான ஆந்திரப் பிரதேச மாநில பானங்கள் கழகம் லிட்., கையகப்படுத்த தொடங்கும் என்று கூறியுள்ளார் துணை முதல்வரும் துறை அமைச்சருமான நாராயணசாமி.

இந்த மாத தொடக்கத்தில், மாநிலத்தில் இயங்கும் 4380 மதுக்கடைகள், 3500 கடைகளாக குறைக்கப்படும் என்று அரசு அறிவித்தது. மேலும், கடந்த தெலுங்குதேச ஆட்சியில் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட 43000 பெல்ட் கடைகளும் புதிய அரசு அமைந்தவுடன் மூடப்பட்டன.

உரிமம் வழங்கப்பட்ட மதுபானக் கடைகளின் சட்டவிரோத அங்கம்தான் இந்த பெல்ட் மதுபானக் கடை. பெல்ட் கடைகளை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 2928 பேர் இதுவரை காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.