டெல்லி:

திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் நடத்த ரயில்வே ஸ்டேஷன் ப்ளாட்ஃபார்ம்களை வாடகைக்கு வழங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

      
இந்தியாவில் தற்போது திருமண நிகழ்ச்சி நடத்துவது மிக ஆடம்பரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் பல நூறு கோடி ரூபாய்களை செலவு செய்து மிக பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இதேபோல் வெளிநாடுகளில் கடலுக்கு அடியில், விண்வெளியில், வானில் பறந்து கொண்டே திருமணம் செய்வது போன்ற விநோத நிகழ்வாகவும் திருமணங்கள் மாறிக் கொண்டிருக்கிறது.

இந்த வகையில் இந்தியாவில் புதிதாக ஒரு திட்டத்தை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்கிறது. ஆண்டிற்கு 33 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை ரயில்வே சந்தித்து வருகிறது. 77 ஆயிரம் கோடி ரூபாயை பயணிகளுக்காக செலவுகிறது. ரூ. 44 ஆயிரம் கோடி மட்டுமே பயணிகள் கட்டணமாக வசூலாகிறது.

இந்த நஷ்டத்தை ஈடுகட்டி லாபம் சம்பாதிக்கும் வகையில் 16 மண்டலங்களில் இருந்து ஆலோசனை வழங்குமாறு ரயில்வே அமைச்சர் சுரேஜ் பிரபு கேட்டுக் கொண்டார்.

இந்த வகையில் மேற்கு ரயில்வே நிர்வாகத்திடம் இருந்து ஒரு ஆலோசனை வந்தது. அதில், ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள ப்ளாட்ஃபாரங்களை திருமண நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டலாம் என்று தெரிவித்திருந்தது.

கடந்த மாதம் டெல்லியில் நடந்த ரயில் விகாஸ் சிவிர் நிகழ்ச்சியில் இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த திட்டத்தை அமல்படுத்த சூரத் ரயில்வே ஸ்டேஷன் தேர்வு செய்யப்பட்டது. இங்குள்ள நவாப்பூர் ரயில்வே ஸ்டேஷின் ஒரு பகுதி மகாராஷ்டிரா மாநிலத்திலும், ஒரு பகுதி குஜராத் மாநிலத்தில் வருகிறது.

திருமணம், பார்ட்டி போன்ற நிகழ்ச்சிகளை பணம் கொடுத்து ப்ளாட்ஃபார்மகளில் நடத்தக் கூடிய மக்கள் சூரத் ஸ்டேஷன் பகுதியில் இருப்பதால் இது சாத்தியமாகும். இந்த ஸ்டேஷனின் 4வது ப்ளாட்ஃபார்மில் 3 முதல் 4 புக்கிங் அலுவலகங்கள் இருப்பது இந்த நிகழ்ச்சிகள் நடத்த வசதியாக இருக்கும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இங்கு திருமணம் நடத்த தற்போது புக்கிங் ஆகியுள்ளது. இது தொடர்பான அனுமதியை கோரி மேற்கு ரயில்வே, ரயில்வே அமைச்கத்திற்கு இந்த வாரத்தில் கடிதம் எழுதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில்வே நிர்வாகத்தில் இந்த புதிய திட்டதால் ரயில் நிலைய ப்ளாட்ஃபாரங்களில் இனி டும்..டும்..டும் சத்தம் கேட்க போகிறது.