விசாகப்பட்டினம்: கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, வரும் 18ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடப்பதாக இருந்த கடற்படை ஒத்திகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரசால் உலக நாடுகள் இன்னும் கடும் பீதியில் இருக்கின்றன. உகான் நகரில் இருந்து பரவிய இந்த வைரசால் சீனாவில் மட்டும் 3000 பேர் உயிரை பறிகொடுத்து இருக்கின்றனர். பல ஆயிரக்கணக்கானோர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

இந் நிலையில், விசாகப்பட்டினத்தில் வரும் 18ம் தேதி நடைபெற இருந்த சர்வதேச கடற்படை ஒத்திகை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு கொரோனா வைரஸ் அச்சுறுத்தலே காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும், ராணுவம், கடற்படை மற்றும் ராணுவத்தினரை முன் எச்சரிக்கை மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

விசாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கும் ஒத்திகையில் 41 நாடுகளின் கடற்படைகள் பங்கேற்க உள்ளன. கடைசியாக இங்கு பிப்ரவரி 2016ல் சர்வதேச கடற்படை ஒத்திகையை நடத்தப்பட்டது, குறிப்பிடத்தக்கது.