2023ம் ஆண்டு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் 1.04 பில்லியன் சுவிஸ் பிராங்காக இருந்த நிலையில், 2024ல் 3.54 பில்லியன் சுவிஸ் பிராங்காக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, இந்தியர்கள் ஸ்விட்சா்லாந்தில் உள்ள வங்கிகளில் வைத்துள்ள பணம் 2024ம் ஆண்டில் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக அந்நாட்டுத் தேசிய வங்கி தெரிவித்துள்ளது.
இந்திய மதிப்பில் சுமார் 37,600 கோடி ரூபாய் இந்த வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளது. இதில், மற்ற வங்கிகளிலிருந்து ஸ்விட்சர்லாந்து வங்கிகளுக்கு மாற்றப்பட்ட இந்தியர்களின் பணம் சுமார் ரூ.32,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
தனிநபர் டெபாசிட்டை பொறுத்த வரை 11 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.3,675 கோடியாகும். இந்தியர்களின் மொத்த வைப்பில் இது பத்தில் ஒரு பங்கு மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அறக்கட்டளைகள் மூலம் ரூ.434 கோடியும், நிதி ஆவணங்கள் மூலம் ரூ.1,431 கோடியும் ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் பணம் இருப்பு உள்ளது.
உலக அளவில் ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் பணம் வைத்திருப்பவர்களின் தரவரிசை பட்டியலில், கடந்த ஆண்டு 67வது இடத்திலிருந்த இந்தியா தற்போது 48வது இடத்தில் உள்ளது. பிரிட்டன் மற்றும் அமெரிக்கா முறையே முதல் இரண்டு இடங்களில் உள்ளன.
Automatic exchange of information agreement-ன் படி 2019ம் ஆண்டு முதல் இத்தகைய விவரங்களை ஸ்விட்சர்லாந்து வழங்கி வருகிறது.
இந்தியர்களைப் பொறுத்தவரை சுவிஸ் வங்கியில் வைத்துள்ள பணம் கருப்புப் பணமாகக் கருதப்பட்டாலும், ஸ்விட்சர்லாந்தை பொறுத்த அளவில் சட்டப்படியான பணமாகவே கருதப்படுகிறது.