உக்ரைன் மற்றும் சீனாவில் மருத்துவம் படித்து வந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக மாணவர்களும் பெற்றோர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் பன்மடங்கு அதிகமாக உள்ளதாலேயே வெளிநாடுகளுக்கு மாணவர்கள் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

2016ம் ஆண்டுக்கு முன் 5 லட்ச ரூபாய் கல்விக் கட்டணம் 30 லட்ச ரூபாய் நன்கொடை என்ற இருந்த நிலை, மருத்துவ படிப்பிற்கு நீட் எனும் நுழைவுத் தேர்வு வந்த பின் கல்விக் கட்டணம் குறைந்தபட்சம் 20 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு சில கல்வி நிறுவனங்களில் இந்த கட்டணம் கடந்த சில ஆண்டுகளில் 90 லட்ச ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக தி இந்து நாளிதழ் குறிப்பிட்டிருக்கிறது.

கல்விக் கட்டணத்தின் மூலம் கிடைக்கும் ஜி.எஸ்.டி. வருவாயை எதிர்பார்க்கும் மத்திய அரசு, மாணவர்களின் நலனில் அதே அளவுக்கு அக்கறை காட்டி வருகிறதா என்பது மருத்துவ கல்லூரிகள் வசூலிக்கும் கட்டணமே சான்றாக உள்ளது.

2019 ம் ஆண்டு சீனாவில் கொரோனா வைரஸ் பரவ துவங்கியதும் அங்கிருந்து வெளியேறிய இந்திய மருத்துவ மாணவர்கள் சீனா மீது விதிக்கப்பட்ட தடையால் மீண்டும் அங்கு சென்று கல்வியை தொடரமுடியாமல் உள்ளனர்.

தற்போது, பல ஆண்டுகளாக பிரிவினைவாதிகளுடன் போரிட்டு வரும் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த துவங்கியுள்ள நிலையில் இங்குள்ள மாணவர்களின் மருத்துவ கனவும் தகர்க்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் கல்வியைத் தொடர தேவையான நடவடிக்கையை உக்ரைனுக்கான இந்திய தூதரகம் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இருந்தபோதும், மருத்துவ படிப்பை ஆன்லைன் மூலம் கற்பது சிறந்ததாக இருக்காது என்பதால் தேசிய மருத்துவ ஆணையம் ஆன்லைனில் படித்தவர்களுக்கு அங்கீகாரம் வழங்க மறுத்து வருகிறது.

இந்தியாவில் போதுமான மருத்துவக் கல்லூரிகள் இல்லாததும், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் மூலம் நூதன முறையில் அரசு லாபம் பார்க்க முயல்வதாலும் வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் இந்த மாணவர்களின் எதிர்காலம் தற்போது கேள்விக் குறியாகி உள்ளது.

சீன மருத்துவக் கல்லூரிகளில் இருந்து பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டு வந்த மாணவர்களின் நிலையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக குறிப்பிடும்படியான முன்னேற்றம் இல்லாததால் சிலர் ஆர்மீனியா நாட்டிற்குச் சென்று தங்கள் கல்வியை தொடர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பிப். 3 ம் தேதி தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டிருக்கும் உத்தரவில், தனியார் மருத்துவக் கல்லூரிகள் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அரசு ஒதுக்கீட்டில் குறைவான மாணவர்களே சேர்ந்தால் மீதமுள்ள இடங்களில் நுழைவுத் தேர்வு அடிப்படையில் தகுதியான மாணவர்களை அந்த இடங்களில் அனுமதிக்க வேண்டும் இந்த 50 சதவீத இடங்களுக்கு அரசு கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்கள் கல்வியைத் தொடர விரும்பினால் இந்த தனியார் கல்லூரிகள் வசம் உள்ள இடங்களிலேயே சேர வேண்டிய நிலை உள்ளது.

இந்தியாவில் நடுத்தர மக்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக் கனியானதால் வெளிநாடுகளில் படிக்கச் சென்ற மாணவர்கள் உயிர்பிழைத்தால் போதும் என்று இந்தியா திரும்பியுள்ள நிலையில் இவர்களின் கல்வியை தொடர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.