அடுத்த 5-7 வருடங்களில் ராணுவத்துக்கு 13000 கோடி டாலர் செலவு செய்ய உள்ள இந்தியா

Must read

 

டில்லி

இந்தியா அடுத்த 5-7 வருடங்களின் ராணுவத்தை நவீனப்படுத்த 13000 கோடி டாலர் அதாவது ரூ.9,34,440 கோடி ரூபாய் செலவு செய்ய உள்ளது.

இந்தியாவுக்கு பன்முனை பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்து வருகிறது.    எனவே அதற்குத் தயார் நிலையில் இந்திய ராணுவத்தை அமைக்க வேண்டிய நிலையில் இந்திய அரசு உள்ளது.    தற்போது இந்திய ராணுவத்திடம் நவீன ஆயுதங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.   எனவே இந்தக் குறையைப் போக்க இந்திய அரசு இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது.

இந்த நவீனமயமாக்கலில், காலாட்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று பிரிவிலும் பல புதிய வகை ஆயுதங்கள், ஏவுகணைகள், போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல், மற்றும் போர்க்கப்பல்கள் ஆகியவற்றை வாங்க உள்ளது.   தற்போதைய நிலையில் உடனடியாக தரைப்படையை நவீனப்படுத்த 2600 போர் வாகனங்கள் மற்றும் 1700 ஆயுதம்  தாங்கிய வாகனங்களைக் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக பன்முனைத் தாக்குதல் நடத்தக் கூடிய 110 போர் விமானங்களை இந்திய விமானப்படைக்காக கொள்முதல் செய்ய உள்ளது.   தற்போதைய நிலையில் வடக்கு மற்றும் மேற்குப் பகுதி எல்லையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகம் உள்ளதாக  கூறப்படுவதால் அந்த பகுதிக்கு உடனடியாக ராணுவ விமானங்கள் உள்ளிட்ட தளவாடங்கள் உடனடித் தேவையாக உள்ளன.

சீனாவிடம் இருந்து வான்வழி மற்றும் கடல் வழி அச்சுறுத்தல்கள் உள்ளதால் கடற்படைக்கு 200 போர்க்கப்பல்கள். 500 விமானங்கள் மற்றும் 24 போர் புரியத் தகுந்த நீர்மூழ்கிக் கப்பல்களை இன்னும் 3-4 வருடங்களில் கொள்முதல் செய்யப்பட உள்ளன.  அத்துடன்  இந்திய விமானப்படைக்குத் தேவையான விமானங்கள் மற்றும் ஏவுகணைகளையும் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக இந்தியா வரும் 5-7 ஆண்டுகளில் 13000 கோடி டாலர் அதாவது 9.344 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்ய உள்ளது.  அத்துடன் இந்திய ஏவுகணைகளான அக்னி ஏவுகணைகளை மேலும் மேம்படுத்தும் திட்டமும் மேற்கொள்ளப்பட உள்ளது.   அக்னி ஏவுகணை 5000 கிமீ தூரத்தில் உள்ள இலக்கை தாக்க வல்லவை ஆகும்.   இந்த ஏவுகணைகள் மூலம் அணு ஆயுத தாக்குதலும் நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

More articles

Latest article