சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நிறைமாத கர்ப்பிணியாக கலந்து கொண்டு ஆடி, வெண்கலம் வென்ற இந்திய செஸ் வீராங்கனை ஹரிகாவுக்கு அழகான  பெண் குழந்தை பிறந்ததுள்ளது. தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.

இந்தியாவில் முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த நகரமாக மாமல்லபுரத்தில் வெகசிறப்பாக நடைபெற்று முடிந்தது.  44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், கடந்த ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் உலகம் முழுவதும் உள்ள 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பான முறையில் செய்தது.

11 சுற்றுகளாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கம் வென்று சாதனை படைத்தது. அர்மேனியா வெள்ளிப்பதக்கத்தையும், இந்தியாவின் பி அணி வெண்கலப்பதக்கத்தையும் பெற்றது. இதேபோல், பெண்கள் பிரிவில் உக்ரைன் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. வெள்ளிப்பதக்கத்தை ஜார்ஜியாவும், வெண்கலப்பதக்கத்தை இந்தியாவின் ஏ அணியும் பெற்றது.

பெண்கள் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்தியாவின் ஏ அணியில் கோனேரு ஹம்பி, ஆர் வைஷாலி, தானியா சச்தேவ் ஹரிகா துரோணவல்லி மற்றும் பக்தி குல்கர்னி ஆகியோர் இடம்பிடித்து இருந்தனர். இந்த வீராங்கனைகளில், தனது முதல் குழந்தைக்கான கர்ப்ப காலத்தில் இருந்த நட்சத்திர செஸ் வீராங்கனை ஹரிகா துரோணவல்லியும் களமாடி இருந்தார்.

தற்போது 31 வயதாகும் கிராண்ட்மாஸ்டர் ஹரிகா தனது 9 மாத கர்ப்பமாக இருந்த நிலையில், அவர் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றார். தான் இடம் பிடித்துள்ள அணி பதக்கம் வெல்ல என்ற உறுதியுடன் அவர் ஆடினார். அவரது  சாதுரிய நகர்த்தல் ஆட்டம் இந்திய அணி புள்ளி பட்டியலில் முன்னேற உதவியது. போட்டியின் 11-வது மற்றும் கடைசி சுற்று வரை அணியின் ஒட்டுமொத்த வெற்றிக்காக ஹரிகா கடுமையாக போராடினார். அவர் இடம்பிடித்த அணி தங்கம் வெல்லும் என பலரும் எதிர்நோக்கி இருந்தனர். ஆனால், அவர்கள் அமெரிக்காவிடம் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தனர். இதனால் அந்த அணியினருக்கு வெண்கல பதக்கமே கிடைத்தது.

அவரின் உறுதியான மனநிலை, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அவரது அணி முதல் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணி என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமையை பெற உதவியது. இறுதியில் அவரின் நீண்ட நெடிய கனவையும் நனவாக்கினார்.

“13 வயதில் இந்திய பெண்கள் சதுரங்க அணியில் நான் அறிமுகமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை 9 ஒலிம்பியாட் போட்டிகளில் விளையாடியுள்ள நான், இந்திய மகளிர் அணிக்காக மேடையில் இடம்பிடிக்க வேண்டும் என்று எப்போதும் கனவு கண்டு, கடைசியாக இந்த முறை வெற்றி பெற்றேன் என்று கூறியிருந்தார். செஸ் ஒலிம்பியாட்டில் கலந்துகொள்ளும் ஆர்வத்தில், அவர் தனது 9 மாத கர்ப்பத்தில்,  தனக்கு வளைகாப்பு வேண்டாம், பார்ட்டிகள் வேண்டாம், கொண்டாட்டங்கள் தேவையில்லை என அனைத்து ஆசாபாசங்களையும் தவிர்த்து, விளையாடி சாதனை படைத்தார். இதை தனது டிவிட் மூலம் உறுதிப்படுத்தினார்.

இந்த நிலையில் தற்போது 31 வயதை அடைந்துள்ள ஹரிகாவுக்கு முதன்முதலாக  அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர். 

இதுகுறித்து டிவிட் பதிவிட்டள்ள  துரோணவல்லி ஹரிகா,  “எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. எங்கள் குட்டி இளவரசியை குடும்பத்திற்கு வரவேற்கிறோம் – கார்த்திக் மற்றும் ஹரிகா, ”என்று தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]