கோவை

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தற்போது இந்தியப் பொருளாதாரம் பெரும் ஆபத்தில் உள்ளதாகக் கூறி உள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி அனைத்துக் கட்சிகளும்  பிரசாரத்தை தொடங்கி  உள்ளன.  காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தமிழகத்தில் பிரசாரத்தைத் தொடங்கி உள்ளார்.  அவர் நேற்று முதலாவதாகக் கோவையில் தனது பிரசாரத்தை துவக்கினார்.   அதன்பிறகு அவர் கருமத்தம்பட்டி, திருப்பூர், உள்ளிட்ட இடங்களில் பிரசாரத்தை நடத்தினார்.

ராகுல் காந்தி, “பிரதமர் மோடி தமிழகத்தின் கலாச்சாரத்தை புரிந்து கொள்ளவில்லை. தமிழக அரசு மத்திய அரசுடன் எவ்வித சமரசத்துக்கும் தயாராக உள்ளது.  பிரதமர் மோடி சிபிஐ யை பயன்படுத்தி தமிழக அரசையும் தமிழக மக்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம் என நினைத்துக் கொண்டு இருக்கிறார்.

தமிழக மக்களை விலை கொடுத்து வாங்கலாம் என மோடி எண்ணுவது ஒரு போதும் நடக்காது.  அதை அவர் இன்னும் அறிந்து கொள்ளவில்லை ” எனத் தனது பிரசாரத்தில் தெரிவித்துள்ளார்.   மேலும் அவர் திருப்பூரில் பின்னலாடை தொழிலாளர்களுடன் கலந்துரையாடி உள்ளார்.  மேலும் கொடி காத்த குமரன் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளார்.

திருப்பூரில் பின்னலாடை தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி நடத்திய கலந்துரையாடலின் போது அவர் இந்திய பொருளாதாரம் பெரும் ஆபத்தில் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.  மேலும் பெரு முதலாளிகளுக்கு ஏராளமாகக் கடன் வழங்கியதும், அதைத் திரும்பப் பெற அரசு நடவடிக்கை எடுக்காததுமே இதற்கு முக்கிய காரணம் என அவர் தெரிவித்தார்.