மும்பை

ங்கதேசத்தில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை மகாராஷ்டிர அரசு இறக்குமதி செய்ய உள்ளது பல இந்திய நிறுவனங்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடம் வகிக்கிறது.  இங்கு சுமார் 88 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு அதில் 3100க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.  மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை அதிக கொரோனா  பாதிப்புள்ள மாநகராட்சியாக உள்ளது.   எனவே மகாராஷ்டிர அரசு கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளை அதிக அளவில் இறக்குமதி செய்யத் திட்டமிட்டது.

அமெரிக்காவில் ரெம்டிசிவிர் என்னும் மருந்து பரிசோதனையில் முதல் இடத்தில் உள்ளது.  ஜிலாட் நிறுவனம் தயாரிக்கும் இந்த மருந்தை அமெரிக்க மூத்த மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். எனவே இந்த மருந்தை அதிக அளவில் வாங்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்தது.  இந்த மருந்தை வங்க தேச மருந்து உற்பத்தி நிறுவனமான எஸ்கேயெஃப் பார்மசூடிகல்ஸ் நிறுவனத்தில் இருந்து இறக்குமதி செய்ய உள்ளது.

இந்தியாவில் ரெம்டிசிவிர் மருந்து பயன்பாட்டுக்கு அனுமதி அளித்த போதிலும் அந்த மருந்தை எந்த நிறுவனமும் தயாரிக்கவில்லை.   எனவே மகாராஷ்டிர அரசு வங்க தேசத்தில் இருந்து இறக்குமதி செய்ய உள்ளது.   இந்த மருந்தைத் தயாரிக்க எஸ்கேயெஃப் பார்மசூடிகல்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கவில்லை என ஜிலாட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆயினும் இந்த மருந்தை வங்கதேசத்தைச் சேர்ந்த எஸ்கேயெஃப் மற்றும் பெக்சிமோ ஆகிய இரு நிறுவனங்கள் ஜிலாட் நிறுவன அனுமதி இன்றி தயாரித்து வழங்கத் தொடங்கி உள்ளன.   சர்வதேச மருந்துச் சட்டத்தின்படி முன்னேற்றம் அடையாத நாடுகள் காப்புரிமை இன்றி உயிர் காக்கும் மருந்துகளைத் தயாரிக்கலாம்.    வங்கதேசம் முன்னேற்றம் அடையாத நாடு என்பதால் இந்த மருந்து உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த நிறுவனங்கள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்தை அனுப்ப உள்ளன.   இது இந்திய நிறுவனங்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது.  வங்கதேசத்தில் பல மருந்து நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.  அவற்றுக்கு இந்திய மருத்துவர்கள் பலர் ஆலோசகர்களாக உள்ளனர்

வங்கதேசம் பல மருந்துகளை உற்பத்தி செய்து வந்தாலும்  பொதுவாக முன்னேற்றம் அடையாத நாடு என அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவை விட மருந்து ஏற்றுமதியில் அந்நாடு முன்னணியில் உள்ளது. ஏற்கனவே இந்தியாவின் சில மருந்து உற்பத்தி நிறுவனங்கள் ரெம்டெசிவிர் மருந்து தயாரிப்புக்கு அனுமதி கோரி ஜிலாட் மருந்து நிறுவனத்துக்கு விண்ணப்பித்துள்ளன.   ஆனால் இதுவரை ஜிலாட் நிறுவனம் அனுமதி வழங்கவில்லை.  இதனால் வங்க தேச மருந்து நிறுவனங்கள் மீது இந்திய நிறுவனங்கள் மிகவும் எரிச்சல் அடைந்துள்ளன.