டில்லி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுக்க இந்திய ராணுவம்  அரசின் முடிவுக்காகக் காத்திருப்பதாக ராணுவ தலைமை அதிகாரி பிபின் ராவத் கூறி உள்ளார்.

சென்ற மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசு விதி எண் 370 ஐ விலக்கிக் கொண்டு காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.   அத்துடன் அந்த பகுதி  இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க உள்ளதாகவும் அரசு அறிவித்தது.   அப்போது உள்துறை அமைச்சர் காஷ்மீர் முழுவதும்,  அதாவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரதேசங்களும் இந்தியாவுக்குச் சொந்தமானது என அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், “நமது அடுத்த திட்டம் பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீரை மீட்டு அதை இந்தியாவுடன் இணைப்பது ஆகும்.  இது என்னுடைய அல்லது எனது கட்சியின் எண்ணம் மட்டும் இல்லை.   இது  கடந்த 1994 ஆம் ஆண்டு காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்ட  நாடாளுமன்ற தீர்மானம் ஆகும்”  எனக் குறிப்பிட்டார்.

சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய ராணுவ தலைமை அதிகாரி பிபின் ராவத், “நமது அடுத்த இலக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்ட வேண்டும் மற்றும் அந்தப் பகுதியை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்பதாகும்.  இது குறித்து அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.  ராணுவம் இதற்காகத் தயார் நிலையில் உள்ளது.   அரசின் முடிவுக்காக ராணுவம் காத்திருக்கிறது” என தெரிவித்துள்ளார்.