துபாய்

இலங்கையை வீழ்த்தி ஜூனியர் ஆசிய கிரிக்கெட் போட்டியில் இந்தியா வாகையர் பட்டத்தை வென்றுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜூனியர் ஆசிய கோப்பை மட்டைப்பந்து (19 வயதுக்குப்பட்டோர்) போட்டி நடந்து வருகிறது. இன்று இந்த தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இறுதி போட்டியில்   இந்தியா- இலங்கை அணிகள் மோதின.

இதில் டாஸ்  வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  முதலில் களமிறங்கிய  இலங்கை அணி தொடக்கத்திலேயே இந்திய அணியின் பந்துவீச்சில் ரன் எடுக்க முடியாமல் திணறியது.  துபாயில் பெய்த  மழையின் காரணமாக ஓவர்கள் 38 ஆக குறைக்கப்பட்ட நிலையில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் மட்டும் எடுத்திருந்தது.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இலக்கு 32 ஓவர்களுக்கு 102 ரன்கள் என நிர்ணயிக்கப்பட்டது.  இந்தியாவின் வெற்றிக்கு ரகுவன்சி 56 ரன்களையும் ஷாய்க் ரஷீத் 31 ரன்களையும் எடுத்து அடித்தளமிட்டனர்.

இந்திய அணி 21.3 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை பறிகொடுத்து 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  இதனால் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் (19 வயதுக்குட்பட்டோர்) போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.