டில்லி

கோவிஷீல்ட் முதல் டோஸும் மற்ற மருந்து இரண்டாம் டோசுமாக ஒருவருக்கே போடுவது குறித்த சோதனை விரைவில் இந்தியாவில் நடக்க உள்ளது.

இந்தியாவில் தற்போது மூன்று கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.   அவை சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்யும் கோவிஷீல்ட், பாரத் பயோடெக் உற்பத்தி செய்யும் கோவாக்சின் மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி ஆகிய மருந்துகள் ஆகும்.  தற்போது கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் அதிக அளவில் போடப்படுகிறது.

தற்போதுள்ள நிலையில் கோவிஷீல்ட் முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்களுக்கு இரண்டாம் டோஸ் ஆக கோவிஷீல்ட் மட்டுமே போடப்படுகிறது.   இதைப் போல் கோவாக்சின் மருந்துக்கும் அதே மருந்து இரண்டாம் டோசாக போடப்படுகிறது.   சமீபத்தில் பிரிட்டனில் நடந்த ஒரு ஆய்வில் முதல் டோசாக கோவிஷீல்ட் போடப்பட்டு இரண்டாம் டோசாக வேறு தடுப்பூசி போடப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வெற்றி கண்டுள்ளது.

இந்தியாவிலும் அது போல கோவிஷீல்ட் முதல் டோஸ் போட்டுக் கொண்ட 20 பேருக்கு வேறு மருந்து போடப்பட்டது.  ஆனால் அந்த பணி காரணம் தெரிவிக்காமல் நிறுத்தப்பட்டது.  இந்நிலையில் நிதி அயோக் உறுப்பினரும் இந்தியாவின் கொரோனா எதிர்ப்பு படைத் தலைவருமான வி கே பால் இரு நிறுவன தடுப்பூசிகளை ஒருவருக்கே போடுவது குறித்து விரைவில் இந்தியாவில் சோதனை நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் கொரோனா தடுப்பூசி பற்றக்குறை அதிக அளவில் உள்ளது.   குறிப்பிட்ட நிறுவன மருந்துகள் என இல்லாமல் இரு நிறுவன மருந்துகளுமே ஒரு சரியான் இடைவெளி இல்லாமல் அளிக்கப்படுகிறது.  அரசால் இரண்டாம் டோஸ் குறித்துச் சரியாகத் திட்டமிட முடியவில்லை.  எனவே இந்த சோதனை வெற்றி பெற்றால் அரசு தனக்குக் கிடைக்கும் தடுப்பூசி மருந்தை இரண்டாம் டோசாக போட முடியும் எனக் கூறப்படுகிறது