புதுடெல்லி:
க்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருந்துப் பொருட்களை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

உக்ரைன் – ரஷ்யா போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஒருபுறம், போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாட்டு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த போதிலும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை ரஷ்யா நிறுத்தவில்லை.

உக்ரைன் விவகாரத்தை பொறுத்தவரை, இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதன் காரணமாக, போரால் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் உக்ரைனுக்கு இதுவரை எந்த உதவியையும் இந்தியா செய்யவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீதும் இந்தியா வாக்களிக்கவில்லை.

இந்நிலையில், உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மத்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, உக்ரைனின் வேண்டுகோளுக்கு இணங்க, அந்நாட்டுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, உக்ரைனுக்கு விரைவில் மருந்துப் பொருட்கள் வழங்கப்படும் என மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ச்சி தெரிவித்துள்ளார்.