டெல்லி: அடுத்த 3 மாதங்களில் 100 கோடி டோஸ்கள் தடுப்பூசி கிடைக்கும், விரைவில் வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி தொடங்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா 2வது அவலை கட்டுக்குள் உள்ளது. கேரளாவில் மட்டுமே அதிக பாதிப்பு பதிவாகி வருகிறது. இதையடுத்து தடுப்பூசி போடும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
நாடு முழுவதும் இதுவரை 80,85,68,144 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் (19ந்தேதி அன்று) 37,78,296 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மத்தியஅரசில் இருந்து மாநிலங்களுக்கு இதுவரை 79.58 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன, மேலும் 15 லட்சத்துக்கும் அதிகமான டோஸ் வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நாடு முழுவதும் இதுவரை நிர்வகிக்கப்படும் ஒட்டுமொத்த டோஸ் 81 கோடியைத் தாண்டியுள்ளதாகவும், கடைசி 10 கோடி டோஸ் 11 நாட்களில் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் கூறினார்.
அக்டோபர் மாதத்தில் 30 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் அரசுக்கு வர இருக்கிறது. அடுத்த 3 மாதங்களில் சுமார் 100 கோடி டோஸ்கள் பெறப்படும். இவைகள் மாநிலஅரசுகளின் தேவைக்கு ஏற்ப பிரித்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த மாதம் ‘தடுப்பூசி மைத்திரி’ திட்டத்தின் கீழ் உபரியான கோவிட் -19 தடுப்பூசிகளின் ஏற்றுமதியை இந்தியா மீண்டும் தொடங்கும் என்றும், கோவாக்ஸ் குளோபல் பூல் மீதான அதன் உறுதிப்பாட்டை பூர்த்தி செய்வதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இருந்தாலும், தனது நாட்டு குடிமக்களுக்கு தடுப்பூசி போடுவது அரசின் முன்னுரிமை என்று கூறியவர், தடுப்பூசி மைத்திரி திட்டத்தின் கீழ் அடுத்த காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) உபரி தடுப்பூசிகளின் ஏற்றுமதி தொடங்கும் என்றும், கோவாக்ஸ் மீதான இந்தியாவின் உறுதிப்பாட்டை நிறைவேற்றும் என்றும் கூறினார்.
கோவிட் -19 க்கு எதிரான கூட்டுப் போராட்டத்தில் உலகத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை நிறைவேற்ற உபரி தடுப்பூசிகள் பயன்படுத்தப்படும் என்றும் கூறினார்.