டெல்லி: கடந்த இரு ஆண்டுகளாக மக்களை வாட்டி வதைத்து வந்த கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில்,  அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் மார்ச் 31ந்தேதியுடன் முடிவுக்கு வருகிறது என்றும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்  இந்த முடிவை எடுத்துள்ளதாக, மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். மத்தியஅரசின் இந்த அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2019ம் ஆண்டு சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய உயிரிக்கொல்லி தொற்றான கொரோனா, உருமாறிய வகையிலும் பரவி கடந்த இரு ஆண்டுகளாக இந்தியா உள்பட உலக நாடுகளை வாட்டி வதைத்து வந்தது. தொற்று பரவலை தடுக்க மத்தியஅரசு, ஊரடங்கு, பொதுமுடக்கம், முக்கவசம், தனிமனித இடைவெளி போன்ற ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்தது. அத்துடன் தடுப்பூசி போடும் பணிகளையும் துரித்தப்படுத்தியது.

மத்திய, மாநில அரசுகள் எடுத்து வந்த தீவிரமான தடுப்பு நடவடிக்கை காரணமாக, தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்விவகாரத் துறை கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையின்படி,  கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படாது என்று  தெரிவித்திருந்தது.

இந்த நிலையில்,  நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட அனைத்து விதமான கொரோனா கட்டுப்பாடுகளும் மார்ச் 31-க்குள் முடிவுக்கு வருவதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய உள்துறைசெயலாளர் அஜய்பல்லா, மாநில தலைமைச்செயலாளர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், கொரோனா பரவலைக் கட்டுப் படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பயனாக, நாடு முழுவதும் கரோனா பாதிப்பு விகிதம் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, இதுவரை பின்பற்றப்பட்டு வந்த கட்டுப்பாடுகளையும் இனியும் தொடர வேண்டிய அவசியமில்லை என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்  முடிவெடுத்திருப்ப தாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

இதன்மூலம் நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் வரும் 31ஆம் தேதிக்குள் முடிவுக்கு கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதேவேளையில், கட்டுப்பாடுகள் தேவையில்லை என்றாலும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தப்படுத்துவது போன்ற வற்றை சமூக பொறுப்புடன் பின்பற்ற வேண்டும்.

2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தீவிரமாக நடைமுறைக்கு வந்த கொரோனா கட்டுப்பாடுகள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது