2021 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று பைசர் நிறுவனம் கோரிக்கை வைத்தபோது, தொலைநோக்கு பார்வையின்றி அன்றைய சூழலை மட்டுமே கவனத்தில் கொண்டு அனுமதி மறுத்தது இந்திய அரசு.

தற்போது இரண்டாவது அலை அனைவரையும் அழவைத்திருக்கும் நிலையில், இந்த தடுப்பூசிக்கு இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகளை நிர்பந்திக்கபோவதில்லை, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிரிட்டன் மற்றும் ஜப்பான் நாடுகளின் ஒழுங்குமுறையையும், உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையையும் ஏற்றுக்கொள்கிறோம் என்று இந்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

ஏப்ரல் மாதம் 13 ம் தேதி இந்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில், ஒன்றரை மாதங்கள் ஆன பின்னும் இதுவரை பைசர் மற்றும் மாடர்னா நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் போடவில்லை  மாறாக அந்நிறுவனங்களின் பதிலுக்காக காத்திருக்கிறது.

உலக நாடுகள் பலவும் இந்நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்காக வரிசையில் காத்திருக்கும் நிலையில், 2023 வரை மருந்து தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

2020 டிசம்பரில் முதல் தடுப்பூசி விநியோகத்தை ஆரம்பித்திருக்கும் இவ்விரு நிறுவனங்களும், அடுத்த சில ஆண்டுகளுக்கு முழுவீச்சில் தாயாரிப்பு வேலைகளில் கவனம் செலுத்த இருப்பதால், மத்திய அரசு இந்நிறுவனங்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு பேசி வருகிறது.

இந்த தகவலை தெரிவித்த மத்திய சுகாதார துறை செயலாளர் லவ் அகர்வால், அவர்களிடம் உபரியாக இருக்கும் மருந்தை தற்போதைக்கு தருமாறு கேட்டிருக்கிறோம், அப்படி ஏதாவது வந்தால் அதனை மாநிலங்களுக்கு அனுப்பிவைப்போம் என்றும் தெரிவித்தார்.

மாநில அரசுகளுக்கு நேரடியாக விற்பனை செய்ய முடியாது என்று பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் தெரிவித்திருப்பதாக டெல்லி மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர்கள் தெரிவித்துள்ள நிலையில், மேலும் எந்தெந்த மாநிலங்களுக்கு இதுபோன்ற பதில் வரும் என்பது வரவிருக்கும் நாட்களில் தெரியவரும்.

இந்நிலையில், தடுப்பூசி வாங்குவது தொடர்பாக அமெரிக்க அரசு உயர் அதிகாரிகள் மற்றும் இந்நிறுவனங்களின் உயரதிகாரிகளை சந்தித்து பேச வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா சென்றுள்ளார்.

இந்த நிறுவனங்களிடம் எந்தெந்த நாடுகள் எவ்வளவு தடுப்பூசி வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது என்ற விவரங்களை பார்த்தால், தடுப்பூசி வாங்க காத்திருக்கும் நாடுகளின் நீண்ட வரிசையில் இந்தியா எங்கு நிற்கிறது என்பது தெளிவாகும்.

பைசர்

அமெரிக்கா :

2020 ஜூலை முதல் கட்டமாக 10 கோடி டோஸ் தடுப்பூசிகளை ஒப்பந்தம் செய்தது, தேவைப்படும் பட்சத்தில் மேலும் 50 கோடி டோஸ் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதே ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்தது.

அதனடிப்படையில், டிசம்பர் மாதம் 10 கோடி டோஸ் மற்றும் ஜனவரி மாதம் 10 கோடி டோஸ் மருந்து வாங்கியுள்ளது, இன்னும் 20 கோடி டோஸ் தடுப்பூசி அமெரிக்கா கேட்கும் நேரத்தில் தரவேண்டிய நிலையில் உள்ளது.

ஐரோப்பிய யூனியன் :

ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் இதுவரை மொத்தம் 240 கோடி டோஸ் தடுப்பூசிகளுக்கான ஒப்பந்தம் போட்டிருக்கிறது பைசர் நிறுவனம்.

முதல் கட்டமாக நவம்பர் 2020 ல் 20 கோடி டோஸ், டிசம்பரில் 10 கோடி டோஸ் தடுப்பூசிகளை 27 உறுப்பு நாடுகளுக்குக்காக வாங்கி இருக்கிறது.

2021 பிப்ரவரி மாதம் 20 கோடி டோஸ் மற்றும் ஏப்ரல் மாதத்தில் 10 கோடி டோஸ் தடுப்பூசிகளை வாங்கியுள்ள நிலையில், மே மாதம் மூன்றாவது முறையாக பைசர் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

90 கோடி டோஸ் தடுப்பூசிகளுக்கு கையெழுத்தாகி இருக்கும் இந்த ஒப்பந்தத்தில், தேவைப்படும் பட்சத்தில் மேலும் 90 கோடி டோஸ்கள் அனுப்பிவைக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மாதம்தோறும் தடுப்பூசிகளை அனுப்பிவைக்க ஒப்புக்கொண்ட இந்நிறுவனம், 2023 ஆண்டு இறுதிக்குள் அனைத்து தடுப்பூசிகளையும் அனுப்பிவைப்பதாக கூறியிருக்கிறது.

இதுதவிர, 3 கோடி டோஸ் தடுப்பூசிக்கு கடந்த ஜூலை மாதம் பிரிட்டன் ஒப்பந்தம் செய்திருக்கிறது, அதே மாதத்தில் ஜப்பான் 12 கோடி டோஸ்கள் ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஆகஸ்ட் மாதம் கனடா நாட்டுடன் ஒப்பந்தம் செய்தபோதும், எத்தனை டோஸ் தடுப்பூசி என்ற விவரம் வெளியாகவில்லை. மேலும், 4 கோடி டோஸ்கள் கோவேக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கவேண்டியுள்ளது.

இது பைசர் நிறுவனத்தின் நிலை, மாடர்னா நிறுவனத்திற்கு வந்திருக்கும் ஒப்பந்தங்கள் எவ்வளவு என்று பார்ப்போம்.

மாடர்னா

அமெரிக்கா :

2020 ஆகஸ்ட் முதல் கட்டமாக 10 கோடி டோஸ் தடுப்பூசிகளை ஒப்பந்தம் செய்தது, தேவைப்படும் பட்சத்தில் மேலும் 40 கோடி டோஸ் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதே ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்தது.

அதனடிப்படையில், டிசம்பர் மாதம் 10 கோடி டோஸ் மற்றும் பிப்ரவரி மாதம் 10 கோடி டோஸ் மருந்து வாங்கியுள்ளது.

ஐரோப்பிய யூனியன் :

முதல் கட்டமாக நவம்பர் 2020 ல் 8 கோடி டோஸ், டிசம்பரில் 8 கோடி டோஸ் தடுப்பூசிகளை வாங்கி இருக்கிறது.

பிப்ரவரி மாதம் போட்ட இரண்டாவது ஒப்பந்தத்தில் 15 கோடி டோஸ் தடுப்பூசிகளை இந்த ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்றும், தேவைப்படும் பட்சத்தில் மேலும் 15 கோடி டோஸ் தடுப்பூசி அனுப்பிவைக்க தயாராக இருக்கவேண்டும் என்று ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுதவிர, ஜப்பான் 5 கோடி டோஸ், கனடா 4.4 கோடி டோஸ், தென் கொரியா 4 கோடி டோஸ், ஆஸ்திரேலியா 2.5 கோடி டோஸ் மற்றும் பிரிட்டன் 70 லட்சம் டோஸ் வழங்க ஒத்துக்கொண்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் கோவேக்ஸ் நிறுவனத்திற்கு 3.4 கோடி டோஸ்கள் வழங்க வேண்டியுள்ளது.

தங்கள் நாட்டு மக்களை காக்க வேண்டி கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதலே பல்வேறு நாடுகள் தடுப்பூசி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், 30,000 கோடி ரூபாயை தடுப்பூசிக்காக பட்ஜெட்டில் ஒதுக்கியதோடு இருந்துவிட்டு தற்போது இரண்டாவது அலை ஆளையே புரட்டிப்போடும் அளவுக்கு வந்தவுடன், எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டிருப்பதையே தடுப்பூசி நிறுவனங்களின் செயல்பாடுகள் வெளிப்படுத்துவதாக உள்ளது.