பாட்னா

பீகார் அரசின் சுகாதாரத்துறை நடவடிக்கைகள் குறித்து அம்மாநில ஆளும் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் குறை கூறி உள்ளார்.

பீகார் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து காணப்படுகிறது.  நேற்று வரை பீகார் மாநிலத்தில் 6.92 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 4,642 பேர் உயிர் இழந்துள்ளனர்.  கொரோனா நோயாளிகள் அதிகரிப்பால் பீகார் மாநிலத்தில் ஆக்சிஜன், மருத்துவப் படுக்கைகள், வெண்டிலேட்டர் போன்றவற்றுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தை ஆளும் ஐக்கிய ஜனதா தள சட்டப்பேரவை உறுப்பினர் அச்மித் ரிஷிதேவ் என்பவர் மனைவி கொரோனாவால் பாதிக்கபட்ட்டுள்ளார்.   அவர்கள் அராரியா நகரில் வசித்து வருகின்றனர்.   எம் எல் ஏ மனைவிக்கு வெண்டிலேட்டர் தேவைப்பட்டதால் அவர் அராரியா மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள ஃபோர்ப்ஸ்கஞ்ச் மருத்துவமனையில் சேர்க்க முயன்றுள்ளார்.

ஆனால் அங்கு வெண்டிலேட்டர்கள் இல்லை என்பதால் அவர் முரளிகஞ்ச் நகரில் உள்ள மருத்துவமனையில் வெண்டிலேட்டருடன் கூடிய படுக்கையை ஏற்பாடு செய்து மனைவியை தனது சொந்த வாகனத்தில் கூட்டிச் சென்றுள்ளார்.   ஆனால்  செல்லும் வழியில் ரிஷிதேவ் மனைவி வாகனத்திலேயே உயிர் இழந்துள்ளார்.

இது குறித்து ரிஷிதேவ், “சரியான நேரத்தில் ஆக்சிஜன் அல்லது வெண்டிலேட்டர் கிடைத்திருந்தால் என் மனைவி உயிர் பிழைத்திருப்பார்.   ஆனால் அது நடக்கவில்லை.  மாறாக பீகார் அரசு மக்களுக்கு மருத்துவ வசதிகள் செய்து கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.  ஆனால் அராரியாவில் அந்த வசதிகள் இல்லை.  இங்குள்ள அனைவரும் உடனடியாக வெளி நகரங்களுக்கு சென்று சிகிச்சை எடுக்க முடியாது.

எனது மனைவியை போதுமான மருத்துவ வசதிகள் கிடைக்காததால் நான் இழந்துள்ளேன்.  இந்த மரணத்துக்கு யாராவது பொறுப்பு ஏற்க வேண்டும்.    என்னைப் போல் மற்றவரக்ள் யாருக்கும் இழப்பு ஏற்படக்கூடாது என்பதால் நான் அரசிடம் சுகாதாரத்துறை வசதிகள் குறித்த விளக்கங்களை கேட்கிறேன்” என கூறி உள்ளார்.

அராரியா மருத்துவமனையில் பி எம் கேர் நிதியில் இருந்து 6 வெண்டிலேட்டர்கள் அளிக்கப்பட்டுள்ளன.   ஆனால் அவை அனைத்தையும் இயக்க தேவையான வல்லுநர்கள் இல்லாததால் இயங்காமல் வைக்கபட்டுள்ளன.   ரிஷிதேவ் தனது சட்டப்பேரவை உறுப்பினர் நிதியில் இருந்து கொரோனா சிகிச்சைக்கு ரூ.2 கோடி கொடுத்துள்ளார்.  ஆனால் அராரியா பகுதியில் எவ்வித முன்னேற்றமும் அதைக் கொண்டு செய்யவில்லை எனப்து குறிப்பிடத்தக்கது.