ஜெனிவா: தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவி வரும் வீரியமிக்க வைரசான ஒமிக்ரான், இந்தியா உள்பட உலகின் 77 நாடுகளுக்கு பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 61ஆக அதிகரித்து உள்ளது.

தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரான் தொற்று, இத்தாலி, இங்கிலாந்து, இந்தியா, போட்ஸ்வானா, ஹாங்காங்,சீனா  உள்பட 77 நாடு களுக்கு பரவி உள்ளது. டெல்டா பிளஸ் வைரஸ்-ஐ விட 50 மடங்கு வீரியமுள்ள உருமாறிய  இந்த வைரஸ், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளவர்களையும் தாக்கி வருகிறது. இதனால், உலக நாடுகள் பீதியடைந்துள்ளன. பல நாடுகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனாம், முந்தைய உருமாறிய கொரோனா வகைகளைவிட, ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது  தெரிவித்து உள்ளார்.

உலகின் 77 நாடுகளில் ஒமைக்ரான் பரவியிருந்தாலும், உரிய சோதனை நடத்தாதால், பல நாடுகளில் அவை இருப்பது தெரியாமல் இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலை கூறியவர்,  ஒமைக்ரான் பரவலை தடுப்பதற்காக பூஸ்டர் தடுப்பூசி போடுவதை உலக சுகாதார அமைப்பு எதிர்க்கவில்லை என்றும், அதேநேரத்தில், இதை காரணமாக கொண்டு தடுப்பூசி பதுக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் அச்சம் தெரிவித்தார்.

இந்தியாவில்  ஒமிக்ரான் தொற்று தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான  ஆந்திரா, கர்நாடக, மகாராஷ்டிரா, டெல்லி  சண்டிகர் உள்பட பல மாநிலங்களில் பரவி உள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்று 4 பேருக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 8 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதன்மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 28 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து,  பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளை இந்தியா வரும் பயணிகள் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு முன் கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டுள்ள  வெளிநாட்டுப் பயணிகளுக்கான வழிகாட்டு நெறி முறைகளில், ஒமிக்ரான் தொற்று அதிகரித்துள்ள நாடுகளான தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிக்கள் முன்கூட்டியே ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு முன்பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது 20-ம் தேதி முதல் கட்டயாமாக்கப்பட்டுள்ளது.

இதனை கண்காணிக்கும் படி பயணிகள் விமான போக்குவரத்து இயக்குனரகம், விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு சுற்றைக்கை அனுப்பியுள்ளது. விமான நிலையங்களில் சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு பரிசோகனைகளை நிறைவேற்றும் பொறுப்பு அந்தந்த விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு உள்ளதாக சுற்றைக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே ஒமிக்ரான் வைரஸ் வீரியம் குறைந்ததாகவும், தடுப்பூசி மூலம் எளிதில் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.