டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கம் 3 மாதங்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு 50ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளதும. இது மக்களிடையே சற்று மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுககும் மேலாக கண்ணுக்கு தெரியாத கொரோனா எனப்படும் பெருந்தொற்றினால் உலக மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவிலும் இந்த பெருந்தொற்று கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு (2020) கொரோனா முதல் அலை பரவிய நிலையில், நடப்பாண்டு (2021) பிப்ரவரி முதலே கொரோனா 2வது அலை பரவத் தொடங்கியது. இதன் தாக்கம் ஏப்ரல் மே மாதங்களில் கடுமையாக இருந்தது. இதனால், மருத்துவ வசதியின்றி ஏராளமானோர் உயிரிழந்தனர். மத்திய, மாநில அரசுகள் எடுத்த தொடர் நடவடிக்கை காரணமாக, தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 42,640 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 91 நாட்களுக்கு பிறகு, தற்போதுதான் தொற்றின் பரவல் 50ஆயிரத்துக்கு கீழே குறைந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 42,640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு 2,99,77,861 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 1,167 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,89,302 ஆக உயர்ந்துள்ளது.
தொற்றின் பிடியில் இருந்து நேற்று ஒரே நாளில் 81,839 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,89,26,038 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 6,62,521 பேர் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை 28 கோடியே 87 லட்சத்து 66 ஆயிரத்து 201 பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) இன்று வெளியிட்டு உள்ள தகவலில், இந்தியாவில் ஜூன் 21ந்தேதி வரையில் 39 கோடியே 40 லட்சத்து 72 ஆயிரத்து 142 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.

Patrikai.com official YouTube Channel