தேனி:

மிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள நேற்று இரவு மதுரை வந்துள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தேனி தொகுதியில் நடைபெற்ற ஆண்டிப்பட்டி பொதுக்கூட்டத் தில் ஒபிஎஸ் மகன் ரவிந்திர நாத்துக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட மோடி, எம்ஜிஆர், ஜெயலலிதாவால் இந்தியா பெருமை கொள்கிறது என்று கூறினார்.

வாக்கு வங்கிக்காக எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து மோடி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மோடியின் நடவடிக்கை பிடிக்காமல், மோடியா, லேடியா என்று கடந்த தேர்தலில் போட்டியிட்டு 37 எம்.பி.க்களை வென்ற ஜெயலலிதாவுக்கோ, அவரது ஆட்சிக்கோ மத்திய அரசு எந்தவித உதவியும் செய்யாத நிலையில், தற்போது ஓட்டுக்காக எம்ஜிஆர், ஜெயலலிதாவால் இந்தியா பெருமை கொள்கிறது என்று மோடி பேசிய இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனி விமானம் மூலம் மதுரை  வந்த மோடி இன்று  தேனி மற்றும் ராமநாதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து  பிரசாரம் செய்து வருகிறார்.  இன்று காலை 10 அளவில் மதுரையில் இருந்து விமான நிலையத்திற்கு சாலை மார்க்கமாக சென்ற பிரதமர், அங்கிருந்து  ஹெலிகாப்டர் மூலமாக தேனி பொதுக்கூட்டத்திற்கு சென்று உரையாற்றினார்.

அப்போது, தமிழில் வணக்கம் கூறி உரையை தொடங்கிய மோடி,  தமிழ்ப்புத்தாண்டுக்கு வாழ்த்துக்கள் என்று கூறினார்.

முன்னதாக மேடைக்கு வந்த மோடியை வரவேற்ற வேட்பாளர் ரவிந்திரநாத், மோடிக்கு பூச்சென்டு கொடுத்து, அவரது காலில் விழுந்து வணங்கினார். அப்போது, மோடி அவரிடம் விரல் மூலம் காலில் விழக்கூடாது என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசியவர், இங்கு  வெயிலின் தாக்கத்தைவிட மக்களின் உற்சாகம் அதிகமாக இருப்பதாக கூறியவர், நாளை நமதே, நாற்பதும் நமதே என்பது மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது தெரிகிறது என்றார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஏழைகளுக்காக வாழ்ந்தார்கள், மக்கள் நலத்திட்டங்களை தந்தார்கள் என்றவர், ஏழைகளுக்காக வாழ்ந்த அந்த இருபெரும் தலைவர்களால் தேசம் பெருமை கொள்கிறது என்று கூறினார்.

உங்களின் அன்பையும், ஆதரவையும் வட்டியோடு வளர்ச்சித் திட்டங்களாக திருப்பித் தருவேன் என 2014-ல் கூறினேன். அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் செய்யப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்களை உங்களுக்கு எடுத்துக் கூற வந்துள்ளேன்..

இந்தியா இப்போது வரலாற்றில் முக்கிய தடம் பதித்துக் கொண்டிருப்பதை காங்கிரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றும்,  காங்கிரஸ்- திமுக கூட்டணி மக்களை திசைதிருப்பப் பார்க்கிறது என்று கூறியவர், மோடியை தோற்கடிக்க ஊழலுக்கு ஆதரவானவர்கள் ஒன்றாக கைகோர்த்துள்ளனர்.

மேலும்,  மு.க.ஸ்டாலின், ராகுலை பிரதமராக முன்மொழிந்தது அந்தக் கூட்டணியில் உள்ளவர்களுக்கே மகிழ்ச்சி தரவில்லை என்று கூறிய மோடி,  நாட்டின் காவலாளியான நான் விழிப்புணர்வுடன் உள்ளேன்,  மக்களை ஏமாற்ற அனுமதிக்க மாட்டேன் வாரிசு அரசியல், குடும்ப அரசியல், ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.

தேசத்தின் பாதுகாப்பு என்று வந்துவிட்டால் அதில் சமரசத்திற்கு இடமில்லை என்று பேசிய மோடி, தேச பாதுகாப்பு விஷயத்திலும் காங்கிரஸ் அரசியல் செய்கிறது, 60 ஆண்டுகளாக இந்தியாவிற்கு அநியாயம் செய்து வந்ததை காங்கிரஸ் கட்சியே ஒப்புக்கொள்கிறது என்று கூறியவர்,

1984-ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு யார் நியாயம் வழங்குவது?

காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது எம்ஜிஆர் அரசை கலைத்ததற்கு யார் நியாயம் வழங்குவார்கள்?

போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யார் நியாயம் வழங்குவது? என பல்வேறு கேள்விகளை எழுப்பியவர்,  தேசத்தின் காவலாளியாக மக்களின் நன்மைக்காக பணி யாற்றி வருகிறேன்.. இந்த தொகுதியில்,  மண்ணுக்கு சொந்தமான வேட்பாளரை கூட காங்கிரசால் தேர்வு செய்ய முடியவில்லை என்று கூறியவர், ரவிந்தநாத்துக்கு வாக்களியுங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

முன்னதாக ஓபிஎஸ் வரவேற்று பேசினார். அப்போது, நாட்டில் மதக்கலவரங்களே இல்லை என்ற நிலையை உருவாக்கியவர் பிரதமர் மோடி என்றும்,  மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அதிமுக, பாஜக செயல்படுகிறது என்று கூறினார்.

மோடி பங்கேற்ற கூட்டத்தில் பாஜக குமரி தொகுதி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், முதல்வர் பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ், தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும்,  அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டு  ராமநாதபுரம் சென்றார். இன்று பிற்பகல் அவர் கர்நாடகா செல்கிறார்.