மான்செஸ்டர்: இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா 46.4 ஓவரில், 4 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் எடுத்த நிலையில், மழையால் ஆட்டம் தடைபட்டுள்ளது.

உலகக்கோப்பையில் இந்தியா தனது நான்காவது ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடி வருகிறது. முதல் 2 ஆட்டங்களில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில், 3வது ஆட்டம் மழைக் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. ரோகித் ஷர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக ராகுல் களமிறங்கி, பொறுப்புடன் அரைசதம் அடித்தார். ‍ரோகித் ஷர்மா 113 பந்துகளில் 140 ரன்களை எடுத்து அவுட்டானார்.

பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, 19 பந்துகளில் 26 ரன்களை எடுத்து பெவிலியன் திரும்பினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனி, 2 பந்துகளை மட்டுமே சந்தித்து, 1 ரன்னில் தனது பணியை முடித்துக்கொண்டார். ஆனால், இது எதைப்பற்றியும் கவலைப்படாத விராத் கோலி தன் பாணியில் அரைசதம் அடித்து தொடர்ந்து விளையாடி வருகிறார்.

அவர் 62 பந்துகளில் 71 ரன்களை அடித்து “இன்று எனது வேலை நிறைய உள்ளது” ‍என்பது போன்று களத்தில் நிற்கிறார். அவருடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்துள்ளார். தற்போதைய நிலையில், இந்திய அணி 46.4 ஓவரில் 305 ரன்களை எடுத்துள்ள நிலையில் மழை குறுக்கிட்டுள்ளதானது, ரசிகர்களை பெருத்த ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

மழை தொடர்ந்து பிரச்சினை ஏற்படுத்தும் பட்சத்தில், டக் வொர்த் லீவிஸ் முறையில் பாகிஸ்தான் ஆடும் நிலை ஏற்படலாம். ஆனாலும், இந்தியாவின் கைவசம் இன்னும் 6 விக்கெட் இருப்பதால், பாகிஸ்தானுக்கு சவாலான இலக்கு நிர்ணயிக்கப்படும் என்றே தெரிகிறது.