டில்லி,
இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் இரட்டிப்பாக மாறுகிறது. அதற்கான மசோதா வரும் பாராளு மன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய எம்.பி.க்கள் குஷியாக உள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களின், சம்பளத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதையடுத்து இந்த மாதம் 16ந்தேதி தொடங்க உள்ள பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தர்க்கல் செய்யப்பட இருப்பதாக தெரிகிறது.
தற்போது, இந்திய பாராளுமன்றத்தின், ராஜ்யசபாவில் 245 உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் 12 பேர் ஜனாதிபதியின் பரிந்துரையின் பேரில் நியமனம் செய்யலாம்.
அதுபோல், மேல்சபையில் 545 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுடன், மேலும் ஆங்கிலோ இந்தியன் பிரிவை சேர்ந்த 2 பேரை ஜனாதிபதி நியமனம் செய்யலாம்.
மொத்த இந்திய எம்.பிக்களின் எண்ணிக்கை 804 ஆகும்.
ஏற்கனவே 2010-ம் ஆண்டு எம்.பி.க்களின் சம்பளம் அதிரடியாக உயர்த்தப்பட்டது. அடிப்படை சம்பளம் ரூ.16ஆயிரத்தில் இருந்து ஒரே தூக்காக தூக்கி ரூ.50ஆயிரமாக உயர்த்தப்பட்டது. மேலும் அவர்களுக்கான சலுகை கட்டணங்களும் உயர்த்தப்பட்டன.
ஆனால், இந்த சம்பளம் போதாது என்று, மேலும் உயர்த்தவேண்டும் என பெரும்பாலான உறுப்பினர்கள் கோரி வந்தனர்.
இதையடுத்து, சம்பளம் உயர்த்துவது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க பா.ஜ.க எம்.பி., யோகி ஆதித்யநாத் தலைமையில் பார்லிமென்ட் குழு அமைக்கப்பட்டது.
அந்த குழுவின் அறிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்தவும் மேலும் பல சலுகைகள் வழங்கவும் வலியுறுத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இதையடுத்து, இந்த அறிக்கையை ஆராய்ந்த நிதி அமைச்சகமும், எம்.பி.,க்களின் சம்பளத்தை உயர்த்த பரிந்துரை செய்துள்ளது. அதை பிரதமர் அலுவலகம் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது.
வர இருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.
எம்.பி.க்களின் பழைய, புதிய சம்பள விவரம்:
எம்.பி.,க்களின் மாதாந்திர அடிப்படை சம்பளம் உள்ளிட்டவை இரட்டிப்பாக்கப்பட உள்ளது.
இதைத் தவிர, கார்கள், வீடுகள் வாங்குவதற்கு வட்டியில்லா கடன்; பார்லிமென்ட் கூட்டத்தில் கலந்து கொள்ளும் தினப்படியை, 2,000 ரூபாயில் இருந்து, 4,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என, பார்லிமென்ட் கூட்டுக் குழு பரிந்துரைத்துள்ளது.
அதேபோல், ஜனாதிபதிக்கும், துணை ஜனாதிபதிக்கும், கவர்னர்களுக்கும் 200 சதவித சம்பளம் உயர்வு அளிக்கப்பட இருக்கிறது.
புதிய சம்பளமாக ஜனாதிபதியின் சம்பளம் ரூ.1.50 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரையில் உயரும். துணை ஜனாதிபதியின் சம்பளம் ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூ.3.5 லட்சம் வரை உயரும் என கூறப்படுகிறது. அதேபோல் கவர்னர்களின் சம்பளமும் கூட இருக்கிறது.
கடைசியாக 2008-ம் ஆண்டு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் கவர்னர்களின் சம்பளத்தை மத்திய அரசு உயர்த்தியது.
கடந்த நிதிநிலை பட்ஜெட்டில், மேல்சபை எம்.பி.,க்களின் சம்பளத்துக்காக ரூ.295 கோடியும்; ராஜ்யசபா எம்.பி.,க்களின் சம்பளத்துக்காக ரூ, 122 கோடியும் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.