சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில், 84 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது இந்தியா.
தனது முதல் இன்னிங்ஸில், இங்கிலாந்து அணி 578 ரன்களைக் குவித்தது. பின்னர், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய சிறிதுநேரத்தில், ரோகித் ஷர்மாவின் விக்கெட்டை இந்தியா இழந்தது.
பின்னர், பொறுமையாக ஆடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷப்மன் கில்லின் விக்கெட் 29 ரன்களுக்குப் பறிபோனது. அதன்பிறகு, இந்திய அணியின் சுவர் புஜாராவுடன் இணைந்து, பொறுப்பான இன்னிங்ஸை விராத் கோலி ஆடி, இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டிற்கு பதிலடி தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தனது பங்காக 11 ரன்களை மட்டுமே சேர்த்து வெளியேறினார் கோலி. அதன்பிறகு வந்த துணைக்கேப்டன் ரஹானே எடுத்தது வெறும் 1 ரன் மட்டுமே. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்னில் சதம் அடித்ததற்கு பிறகு, ரஹானே எந்த பெரிய இன்னிங்ஸையும் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்த ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகள் பறிபோன நிலையில், இந்திய அணியின் சுவர் புஜாராவுடன், ரிஷப் பன்ட் ஜோடி சேர்ந்துள்ளார். தற்போது, இவர்கள் இருவரின் கையில்தான் எல்லாமே உள்ளது. இவர்கள் பெரிய இன்னிங்ஸ் ஆடினால் மட்டும்தான் இந்திய அணி தப்பிப் பிழைக்கும் வாய்ப்பு உள்ளது.
இல்லையேல், ஃபாலோ ஆன் ஆகும் பரிதாபம் நேரும். ஆஸ்திரேலிய வெற்றிக்குப் பிறகு ஆஹாஓஹோ என்று பில்டப் தரப்பட்ட நிலையில், ஃபாலோஆன் நிலை வந்தால், பெருத்த அவமானம் நேரும் சூழல் உள்ளது.
இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் & டாம் பெஸ் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்துள்ளனர்.