இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வரும் மக்களில், 10ஆண்டுகளில் 27 கோடி பேர் மீட்கப்பட்டு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது.
ஐ.நா.சபை சமீபத்தில், அபிவிருத்தி திட்டம் 2019 உலகளாவிய பரிமாண வறுமைக் குறியீட்டை வெளியிட்டது. அதில் இந்த தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது.
உலகில் வாழும் ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் வாழ்கின்றனர். இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பது வறுமை. வறுமை என்னும் கொடும் பிணியைத் தவிர்த்தாலொழிய இந்தியா முன்னேறாது. இந்திய திட்டக் குழுவினால் பயன்படுத்திய மதிப்பீட்டு வரயறையின்படி, 2004-05 ஆண்டுகளில் 27.5% மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதுபோல 2005 ஆம் ஆண்டுக்கான உலக வங்கியின் (World Bank) கணிப்பீட்டின்படி, இந்திய மக்கள் தொகையில் 42 சதவீதம் மக்கள் அனைத்துலக வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர் என்று தெரிவித்து உள்ளது. இந்த நிலையில், தற்போது இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி அமைப்பு, மக்களின் குறைந்த பட்ச வருமானம், மக்கள் தொகை, உடல்நலக் குறைவு, செய்யும் வேலையின் தரம் மற்றும் வன்முறை, அச்சுறுத்தல் ஆகியவற்றைக் கொண்டு வறுமை கணக்கீடு வகுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
அதன்படி, ஆய்வறிக்கையில், உலகில் உள்ள 101 நாடுகளில் 130 கோடி பேர் வறுமையின் பிடியில் சிக்கியி உள்ளார்கள் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது. இதில், 10 நாடுகள் வேகமாக தங்கள் மக்களை வறுமையில் இருந்து மீட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.
அந்த நாடுகள், பங்களாதேஷ், கம்போடியா, காங்கோ, எத்தியோப்பியா, ஹைதி, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பெரு மற்றும் வியட்நாம் என தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் 2006 முதல் 2016ம் ஆண்டுக்கு இடைப்பட்ட 10 ஆண்டுகளில் 27 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவித்து உள்ளது. அதுபோல, பங்களாதேஷ் 2004-14 ஆகிய 10 ஆண்டுகளில் 19 லட்சம் பேரை வறுமையில் இருந்து மீட்டிருக்கிறது.
இந்த 10 ஆண்டுகளில் ஊட்டத்து குறைபாடு கொண்ட இந்திய மக்களின் எண்ணிக்கை 44.3% லிருந்து 21.2% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.
குழந்தை இறப்பு 4.5% லிருந்து 2.2% ஆகவும், சமையல் எரிவாயு இல்லாத மக்கள் எண்ணிக்கை 52.9% லிருந்து 26.2% ஆகவும் குறைந்துள்ளது.
சுகாதாரமற்ற மக்கள் எண்ணிக்கை 50.4% லிருந்து 24.6% ஆகவும், குடிநீர் இல்லாத மக்கள் 16.6% லிருந்து 6.2% ஆகவும் குறைந்துள்ளனர்.
மேலும், மின்சாரம் இல்லாத மக்கள் 29.1% லிருந்து 8.6% ஆகவும், வீடுகள் இல்லாத மக்கள் 44.9% லிருந்து 23.6% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.