ஸ்ரீநகர்:

ம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான் இரு நாட்டு எல்லையில் போர்  விமானங்களை பறக்கவிட்டு பதற்றத்தை அதிகரித்து வருகிறது.

இதையடுத்து,  இந்திய ராணுவம் உஷார் படுத்தப்பட்டு, பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பதற்றம் அதிகரித்து வருகிறது.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மூக்கை நுழைத்து வரும் பாகிஸ்தான் இந்திய அரசை கடுமையாக  சாடி வருகிறது. இந்தியா மீண்டும் ஒரு புல்வாமா தாக்குதலை சந்திக்கும் என்றும் மிரட்டி உள்ளது. மேலும் பக்ரீத், சுதந்திர தின நிகழ்ச்சிகளை சீர்குலைக்கும் நிகழ்வுகள் பாகிஸ்தான் பயங்கரவாதி களால் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், காஷ்மீரின்  லடாக் எல்லையில் பாகிஸ்தான் போர் விமானங்களின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  லடாக் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் பகுதியான ஸ்கர்டு விமானப்படை தளத்தில் ஜே.எப்.17 ரக போர் விமானங்களை நிறுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அந்த விமானப்படை தளத்தில் பாகிஸ்தானின் சரக்கு மற்றும் போர் விமானங்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக இந்தியாவுக்கு தகவல் கிடைத்து இருக்கிறது. சி-130 சரக்கு விமானங்கள் விமானப்படை தளத்துக்கு வந்து சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதையடுத்து இந்திய ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் போர் விமானங்களின் நடமாட்டத்தை இந்திய ராணுவம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.  இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.