டில்லி

ந்தியாவில் கொரோனா தடுப்பூசி தேவையான அளவுக்குத் தடையின்றி கிடைக்கத் தேவையான அனைத்து வகை முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது.

உலக அளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது.  இதுவரை 67.6 லட்சத்துக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 2.16 லட்சம் பேர் உயிர் இழந்து தற்போது 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.  தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   எனவே இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் தேவை அதிக அளவில் உள்ளது.

தற்போதைய நிலையில் உலக அளவில் 2021 ஆம் வருட முடிவுக்குள் 2 முதல் 4 லட்சம் கோடி டோஸ் தடுப்பூசிகள் உற்பத்தி ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.  இதில் இந்தியாவில் அதிக அளவில் உற்பத்தி ஆக வாய்ப்புள்ளது.   உலகில் உள்ள மிகப் பெரிய தடுப்பூசி நிறுவனமான சிரம் இன்ஸ்டிடியூட் சுமார் 40 முதல் 50 கோடி டோஸ்கள் தயாரிக்க உளது.

இது மேலும் அதிகரித்து இந்தயாவில் மாதத்துக்கு 20 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க முடியும் என தொழில்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதே வேளையில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஆகிய மருந்துகள் இறக்குமதி குறித்த பேச்சு வார்த்தைகளும் தொடங்க உள்ளன.

வளர்ச்சியடைந்த நாடுகள் ஏற்கனவே தங்கள் நாடுகளுக்குத் தேவையான அளவு தடுப்பூசிகளைச் சேகரிக்க நிறுவனங்களுடன் ஒப்பந்தம் இட்டுள்ளன..  இதைத் தவிர இந்தியா உள்ளிட்ட பல வெளிநாட்டு அமைப்புக்களும் முன் கூட்டியே கொரோனா தடுப்பூசிகள் வாங்கும் முனைப்பில் இறங்கி உள்ளன. எனவே இந்திய அரசு தற்போது இருந்தே தேவையான அளவு கொரோனா தடுப்பூசி கிடைக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

இந்த மருந்தை அத்தியாவசிய பொருட்கள் விதி, மருந்துப் பொருட்கள் விதி மற்றும் பேரிடர் மேலாண்மை விதியின் கீழ் கொண்டு வரத் தேவையான முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது.  இதன் மூலம் அதில் அளவில் கொரோனா தடுப்பூசிகளைச் சரியான விலையில் நாட்டு மக்களுக்குக் கிடைக்க  நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

உதாரணமாக அத்தியாவசிய பொருட்கள் விதியின் 3 ஆம் பிரிவின் படி மத்திய அரசுக்கு இவற்றின் உற்பத்தி, விநியோகம், பகிர்ந்தளிப்பு உள்ளவற்றைக் கட்டுப்படுத்த முடியும்  இது தடுப்பூசிகளுக்கும் பொருந்தும்.   எனவே அரசு இந்த பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் உற்பத்தியும் முழுவதுமாக அல்லது அதிக அளவில் இந்தியாவில் மட்டுமே குறிப்பாக மத்திய மாநில அரசுகளுக்கு மட்டுமே விற்க உத்தரவிட முடியும்.

இதைப் போல் பேரிடர் மேலாண்மை மற்றும் மருந்தும் பொருட்களின் விதியின் படி இந்த பொருட்களின் ஏற்றுமதியை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரலாம்.   அதன் பிறகு ஒவ்வொரு ஏற்றுமதிக்கும் நிறுவனம் அரசின் உத்தரவை எதிர்பார்க்க வேண்டும்.  சுருக்கமாகச் சொன்னால் நாட்டுக்குத் தேவையானது போக மீதமுள்ளது மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும்,

மூத்த அரசு அதிகாரி ஒருவர்,  ”வழக்கமாக இது போல நடப்பதில்லை.   உற்பத்தி நிறுவனங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அரசு தனக்குத் தேவையான மருந்துகளைக் கொள்முதல் செய்து வருகிறது.   ஆனால் தற்போதுள்ள அசாதாரணமான சூழலில் அரசு சட்டப்படி அழுத்தம் கொடுத்தால் மட்டுமே மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்யும் முன்பு நமது மக்களுக்கு கிடைப்பதை நிர்ணயிக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.