சமீபத்திய ஆண்டுகளில், உலகின் மிக மோசமான சர்வாதிகார நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளதாக ஸ்வீடனைச் சேர்ந்த ‘வெரைட்டி ஆஃப் டெமாக்ரசி இன்ஸ்டிடியூட்’ (Varieties of Democracy Institute – V-Dem) வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

2018 ஆம் ஆண்டு முதன்முதலில் அடையாளம் காணப்பட்டதைப் போல, 2023 ஆம் ஆண்டின் இறுதியில் தேர்தல் ரீதியாக நாடு மேலும் எதேச்சதிகாரமாக மாறியுள்ளது என்று ‘வாக்கெடுப்பில் ஜனநாயகம் வெற்றி மற்றும் தோல்வி’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடனை தளமாகக் கொண்ட V-Dem நிறுவனம், ஜனநாயகம் மற்றும் எதேச்சதிகாரத்திற்கு இடையே நான்கு இடைநிலைகளைக் கொண்டு நாடுகளை வகைப்படுத்துகிறது.

பேச்சு சுதந்திரம் மற்றும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் போன்ற அடிப்படைத் தேவைகள் உள்ளிட்ட காரணிகளை ஆராயும் இந்த அமைப்பு இந்தியாவில் பரவலாக தேர்தல்கள் நியாயமாக நடக்கவில்லை என்று கூறியுள்ளது.

இந்தியா உட்பட உலக மக்கள்தொகையில் 35 சதவீதத்தைக் கொண்ட 42 நாடுகளில் எதேச்சதிகார செயல்முறை நடந்து வருவதாக வி-டெம் அறிக்கை கூறுகிறது. உலக மக்கள்தொகையில் 18 சதவீதம் பேர் இந்தியாவில் வசிப்பதாகவும் எதேச்சதிகாரத்தின் கீழ் வாழும் உலக மக்கள் தொகையில் பாதி பேர் இந்தியாவில் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளது.

இந்திய அரசு தொடர்ந்து மத சுதந்திரத்தை நசுக்கி வருவதாக அந்த அறிக்கை கூறுகிறது. அரசியல் எதிரிகளை அச்சுறுத்துவதும், அரசின் கொள்கைகளை எதிர்ப்பவர்கள் மற்றும் கல்வித்துறையில் பணிபுரியும் விமர்சகர்களை மௌனமாக்குவதும் தற்போது சர்வசாதாரணமாகிவிட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.

மோடி அரசுக்கு எதிராக விமர்சனங்கள் வைப்போர் மீது தேசத்துரோக மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகளை சுமத்தி வாயடைக்க வைப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.

2019 இல் UAPA சட்டத்தை மாற்றியதன் மூலம், மதச்சார்பின்மைக்கான அரசியலமைப்பின் உறுதிப்பாட்டை பாஜக அரசாங்கம் புறக்கணித்தது என்று அது மேலும் கூறுகிறது.

2019 ஆம் ஆண்டின் இந்த அரசியலமைப்பு மாற்றம், தனிநபர் அளவில் மக்களை பயங்கரவாதிகளாக அறிவிக்கும் உரிமையை மத்திய அரசுக்கு வழங்குகிறது. இது வழக்குகளை விசாரிக்க புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குகிறது.

எல் சால்வடார் மற்றும் மொரிஷியஸ் போன்ற மோசமான பிற்போக்கு அரசாங்கங்களின் வரிசையில் இணைந்துள்ள இந்தியா ஊடகங்களை தணிக்கை செய்வதற்கான முயற்சிகளை அதிகரித்து வருவதாக V-Dem கூறியுள்ளது.

மேலும், மூன்றாவது முறையாக பொதுத்தேர்தலில் பாஜக வெற்றிபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகக் கூறப்படும் நிலையில் அது எதேச்சதிகாரத்தை மேலும் அதிகரிக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

V-Dem அமைப்பின் இந்த அறிக்கை குறித்து வெளியுறவுத் துறை இதுவரை எந்த பதிலும் கூறவில்லை என்ற போதும் இதற்கு முன் இதேபோன்ற அறிக்கை வெளியான போது இவை அவசியமற்றது என்று விமர்சித்திருந்தது.