டெல்லி: மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு நாளையொட்டி, அவருக்கு புகழாரம் சூட்டியுள்ள பிரதமர் மோடி, பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்றும், உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் இந்தியா என்றும்  பிரதமர் மோடி பெருமைப்படுத்தி உள்ளார்.

மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை அரசு விழாவாக கொண்டாடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். தொடர்ந்து சென்னையில் உள்ள பாரதியார் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு நினைவு நாள் முன்னிட்டு, அவருக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தி டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், சிறப்புவாய்ந்த சுப்ரமணிய பாரதியாரின் 100வது நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது பெரும் புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு, சமூக நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நாம் நினைவு கூறுகிறோம். ” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த 2020 டிசம்பரில் பாரதியை பற்றி பிரதமர் ஆற்றிய உரை குறித்த வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

பின்னர், சர்தார்தம் பவனின் லோகார்பனை குறிக்கும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது என்று புகழாரம் சூட்டியதுடன்,  சுப்பிரமணிய பாரதியின் 100 வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக காசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதி பெயரில் தமிழ் இருக்கை அமர்வை நிறுவுவதாக அறிவித்தார்.