ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் புஜாரா 193 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இரட்டை சதம் எடுப்பதற்கு 7 ரன்களே உள்ள நிலையில் புஜாரா ஆட்டமிழந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. 4வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 622 ரன்களை குவித்துள்ளது.

india

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 டி-20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாத இந்திய அணி அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிப்பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி தொடரை சமனிலைக்கு கொண்டுவந்தது. இதையடுத்து மெல்போர்ன் மைதானத்தில் நடந்து முடிந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மீண்டும் வெற்றிப்பெற்று தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது.

இந்நிலையில், இரு அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தோ்வு செய்தது. இந்த தொடா் முழுவதும் சிறப்பாக விளையாடாத கே.எல்.ராகுலுக்கு இந்த போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது. மயங்க் அகா்வாலும், கே.எல்.ராகுலும் தொடக்க ஆட்டக்காரா்களாக களம் இறங்கினா். இந்தப் போட்டியிலும் ராகுல் 9 ரன்களிலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இவரைத் தொடர்ந்து மயங்க் அகா்வால் 77 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 23 ரன்களிலும், துணைகேப்டன் ரஹானே 18 ரன்களிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனா். எனினும் நிதானமான ஆட்டத்தை தொடர்ந்த புஜாரா டெஸ்ட் அரங்கில் தனது 18வது சதத்தை பூா்த்தி செய்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் இது புஜாராவின் 3வது சதமாகும்.

இறுதியில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில், முதல் இன்னிங்சில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 303 ரன்கள் சோ்த்திருந்தது. இதையடுத்து, புஜாரா 130 ரன்களுடனும், ஹனுமா விஹாரி 39 ரன்களுடனும் 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். விஹாரி மேலும் 3 ரன்கள் எடுத்து 42 ரன்களில் ஆட்டமிழந்தை தொடர்ந்து புஜாராவுக்கு ஜோடியாக ரிஷப் பண்ட் களமிறங்கினார். இருவரும் நிலைத்து நின்று ரன்கள் குவித்தனர்.

சிறிது நேரத்தில் 193 ரன்கள் எடுத்திருந்த புஜாரா, லியான் பந்தில் ஆட்டமிழந்தார். இதன் மூலம், சச்சின், சேவாக், டிராவிட் ஆகியோரது சாதனையை முறியடிக்க புஜாரா தவறினார். ஆஸ்திரேலியாவில், அதிக ரன்கள் குவித்த ஆசிய வீரர்களில் சச்சின்( 241), ராகுல் டிராவிட்( 233), ரவி சாஸ்த்ரி(206), அசார் அலி(201), சேவாக் (195) ரன்கள் எடுத்துள்ளனர். இவர்களின் சாதனையை தகர்க்க முயன்ற புஜாராவின் முயற்சி எதிர்பாராத விதமாக தகர்த்தப்பட்டது.

புஜாராவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது 2ஆவது சதத்தை ரிஷப் பண்ட் பூர்த்தி செய்துள்ளார். இதன் மூலம், ஆசிய அளவில் 100 ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர் வரிசையில் ரிஷப் பண்ட் இடம் பிடித்துள்ளார். அதன்பின்னர் வந்த ஜடேஜா 81 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.
ரிஷப் பண்ட் 159 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியாக இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்த நிலையில் போட்டியை டிக்ளேர் செய்தது.