புதுடெல்லி: 

லகின் மிகப்பெரிய தபால் சேவையாக விளங்கி வரும் இந்திய தபால் சேவை, தற்போது உயிர் காப்பனாக மாறி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பை கட்டுபடுத்தும் நோக்கில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிர்காக்கும் மருந்துகளை வழங்க போஸ்டல் சேவை பெரிதும் உதவி வருகிறது.

இந்த தபால் துறை சிவப்பு அஞ்சல் வேன்கள் இந்தியாவில் உள்ள 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சேவையாற்றி வருகிறது. கடிதங்கள் மற்றும் தொகுப்புகளை வழங்குவது மட்டுமின்றி இந்தியர்களுக்கான முதன்மை சேமிப்பு கருவியாகவும் இந்த தபால் துறை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் போன்றவற்றை கொண்டு செல்லும் சேவையையும் தபால் துறை செய்து வருகிறது.

தற்போது, கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவாமல் இருக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களின் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க வெளியே செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில், பொதுமக்கள் இந்தியா அஞ்சல் வங்கியில் புதிய கணக்கை தொடங்கி, தங்களின் ஆதாா் எண்ணை இணைத்து, வாடிக்கையாளா்கள் தங்களின் ஆதாா் எண் இணைக்கப்பட்ட எந்தவொரு வங்கிக் கணக்கிலும் பணம் செலுத்துதல், பணம் பெறுதல், நிதிப் பரிமாற்றம், பணம் இருப்பை அறிதல் போன்ற அடிப்படை பணப் பரிவா்த்தைகளை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தபால் மூலம் முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட மருத்துவப்பொருட்களை கொண்டுசெல்ல தமிழ்நாடு அஞ்சல் வட்டம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கொரோனா ஊரடங்கு உத்தரவால் அனைத்து போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் அஞ்சல்துறை பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை நிதி மற்றும் அஞ்சல் சேவைகளை வழங்கி வருகிறது. இந்தநிலையில், சரக்கு போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய மற்றும் உயிர்காக்கும் மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்களை பெறுவதற்கு அஞ்சல் துறையின் இணைய வழியில் முன்பதிவு செய்யலாம் அல்லது அருகில் உள்ள அஞ்சலகங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்யலாம்.

மேலும் முக்கவசம், சானிடைசர், கையுறை, வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை பிற இடங்களுக்கு கொண்டு செல்ல அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அஞ்சல் அலுவலகங்களில் முன்பதிவு செய்யலாம். இவை அஞ்சல் துறையின் சரக்கு வாகனத்தில் மிகவும் பாதுகாப்பாக அனுப்பப்படும். இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடு அஞ்சல் வட்டம் செய்துள்ளது.

இவ்வாறு கூறினார்.