டோக்லாம்:

ந்திய – சீனா இடையே பெரும் போர் பதற்றத்தை ஏற்படுத்திய டோக்லாம் பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெறுவதாக இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

இந்தியா – சீனா எல்லையான டோக்லாம் பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. கடந்த  இரு  மாதங்களுக்கு முன்பு அங்கு சாலை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டது.

இதனை இந்தியப் படை தடுத்தது. இதனால் இரு தரப்பு படையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதைத்தொடந்து சீன ராணுவம் அப்பகுதியில் தனது படைகளை குவித்தது. இந்தியாதான் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டிய சீனா, இனி பேச்சுவார்த்தைக்கே இடமில்லை, மேலும் இந்தியப் படைகள் அங்கிருந்து வெளியேற்றப்படும் வரை பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும் தெரிவித்தது.

இந்தியாவும், “அந்த பகுதியில் இருந்து சீனா தனது படைகளை திரும்பப்பெற வேண்டும். அதுவரை எங்களது படையினரை திரும்பப்பெற முடியாது” என உறுதிபடத் தெரிவித்தது.

இதனை ஏற்க மறுத்த சீனா 1962ஆம் ஆண்டு நடந்த போரைப்போல, இந்தியா தோல்வியைச் சந்திக்கும் என்று எச்சரித்து ஆத்திரமூட்டியது.

ஆனாலும் இந்தியா தனது நிலையில் உறுதியாக இருந்ததோடு. எந்த ஒரு சூழலையும் எதிர்கொள்ளத் தயார் என்று அறிவித்தது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் என்ற அச்சம் ஏற்பட்டது.

இதற்கிடையே இருநாட்டு மேல்மட்ட அதிகாரிகள் டோக்லாம் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதும் தொடர்ந்தது. ஆனாலும் இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை

இன்னொரு புறம் இரு நாடுகளும் தங்களின் படை வீரர்களை டோக்லாம் பகுதியில் குவித்து வருவதும் தொடர்ந்ததால் போர் பதற்றம் உச்சத்தை அடைந்தது.

இந்த நிலையில் இரு நாட்டு உயர் அதிகாரிகளுக்கும் தொடரந்து நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், டோக்லாம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள படையினரை இரு நாடுகளும் வாபஸ் பெற ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து கடந்த இரு மாதங்களுக்கு மேலாக நிலவி வந்த பதற்ற நிலை நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.