டில்லி

கோவாக்சின் தடுப்பூசியை 12 வயதுக்கு அதிகமானோருக்குப் போட இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்துள்ளது.

இதுவரை இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 89% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.   இதுவரை 18 வயதுக்குக் கீழ் உள்ள 40 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதிக்கவில்லை.  இந்நிலையில் இந்தியாவில் அடுத்த மாதம் 3 ஆம் தேதி முதல் 15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதித்துள்ளது.

இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் ஜைடஸ் கெடிலா நிறுவனம் தயாரிக்கும் ஜைகோல் டி தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்டோருக்குச் செலுத்த அவசரக் கால அனுமதி அளித்துள்ளது.  தற்போது இரண்டாம் தடுப்பூசியாக பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் இது குறித்து, “கோவாக்சின் தடுப்பூசி தனித்துவமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. வயதுவந்தோருக்குத் தனியாகவும், குழந்தைகளுக்குத் தனியாகவும் தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி அனைத்துப் பிரிவினருக்கும் பாதுகாப்பானது, திறன்மிக்கது என நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கோவாக்சின் தடுப்பூசி வயதுவந்தோருக்கு என்ன மாதிரியான பாதுகாப்பை வழங்கிடுமோ அதே பாதுகாப்பைக் குழந்தைகளுக்கும் வழங்கும் என நம்புகிறோம்” என அறிவித்துள்ளது.