சென்னை

மிழகத்தில் வரும் 3 ஆம் தேதி முதல் 15-18 வயது ஆனவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்படும் என தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

நேற்று நாட்டு மக்களிடையே பேசிய பிரதமர் மோடி, ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து 15- 18 வயது வரையிலான குழந்தைகளுக்குத் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதைக் கடந்த முதியோர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசிகள் செலுத்தும் பணி ஜனவரி 10ஆம் தேதி முதல் தொடங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இன்று தமிழகம் முழுவதும் 16வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் சென்னையில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த பின் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.  செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

அமைச்சர் மா சுப்ரமணியன்,  ”தமிழகம் முழுவதும் இன்று 16வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. நம்மிடம் 80 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. இன்று சென்னையில் இன்று 2.5 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி சென்னையில் மட்டும் 1600 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரான் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 22 பேர் மட்டுமே மருத்துவமனையில் உள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட 34 பேரில் 12 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.

அகில இந்தியாவில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது   அனைவரும் தயக்கமின்றி அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.  இதுவரை தமிழகத்தில்  8.14 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதில், 84.87% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 55.85% பேர் 2ம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்

மத்திய அரசு வழிகாட்டுதல் படி ஜனவரி 3ம் தேதி முதல் 15-18 வயதுடையோருக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும்.    ஜனவரி 10ம் தேதி முதல் 60 வயதை தொண்டியோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.