புதுடெல்லி: சீன அதிபர் இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளதை முன்னிட்டு, சீன குடிமக்களுக்கான இ-விசா கட்டுப்பாடுகளை தளர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது இந்திய தூதரகம்.

இதுதொடர்பாக இந்தியத் தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; சீனர்களுக்கான விசா காலம் மற்றும் கட்டண முறையில் சலுகைகள் அளிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் இ-கான்ஃபரன்ஸ் விசா காலத்தின் அளவு 60 நாட்களாக உள்ளது.

இதனடிப்படையில் இந்தியாவிற்கு வரும் சீனர்கள் மொத்தம் 60 நாட்கள் மட்டுமே இங்கு தங்கியிருக்க முடியும். இ டிவி கட்டணம் தற்போதைய நிலையில் 80 டாலர்களாக வசூலிக்கப்படுகிறது.

தற்போதைய புதிய அறிவிப்பின்படி விசா காலத்தை மேலும் 30 நாட்கள் நீட்டித்தும், இ டிவி கட்டணத்தை 40 நாட்களாக கு‍றைத்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விசா மூலமாக ஒரேமுறை மட்டும் வந்துசெல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கான இ டிவி கட்டணம் 25 டாலர்களாக குறைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல, ஒருமுறை விசா பெற்று பலமுறை இந்தியாவிற்கு வந்துசெல்லும் சலுகைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை சீனர்கள் தரப்பில் நீண்டகாலமாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.