விராத் கோலி, சிறிது இடைவெளிக்குப் பின்னர் தலைமையேற்ற டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்திடம் மிக கேவலமான தோல்வியை சந்தித்துள்ளது இந்திய அணி.
இதன்மூலம், தனிப்பட்ட முறையில் ஒரு நல்ல பேட்ஸ்மேனான விராத் கோலி, நல்ல கேப்டன்தானா? என்ற சந்தேகம் மீண்டும் வலுவாக எழுந்துள்ளது.
இவர் கடந்த காலங்களில், வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், இந்தியாவிற்கு வந்து ஆடிய தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை போன்ற வலுகுறைந்த அணிகளிடம் மோதி, டெஸ்ட் தொடரை வென்றார். கடந்தமுறை வலுகுறைந்த ஆஸ்திரேலிய அணியையும் அதன் சொந்த மண்ணில் நல்வாய்ப்பாக வீழ்த்தினார்.
ஆனால், நியூசிலாந்தில் டெஸ்ட் தொடரை மோசமாக தோற்றார். சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரிலும், இவர் தலைமையேற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வரலாற்று தோல்வி ஏற்பட்டது. தற்போது, இங்கிலாந்து அணிக்கெதிராக தனது சொந்த மண்ணிலேயே கேவலமான தோல்வியை தனது தலைமையில் பதிவு செய்திருக்கிறார் விராத் கோலி.
முன்னாள் இந்திய வீரர் அசோக் மல்ஹோத்ரா, விராத் கோலியின் அணியின் மீதான அணுகுமுறையிலேயே தவறு இருக்கிறது என்கிறார். அவர் தன்னை ஒரு ஸ்டாராக நினைத்துக் கொள்வதால், அணியின் இதர வீரர்கள், அவரை அணுகுவதற்கே அஞ்சுகிறார்கள் என்கிறார் மல்ஹோத்ரா.
ஆனால், ரஹானே ஒரு சாதாரண நபர் என்பதாலும், மிகவும் எளிமையாக நடந்து கொள்வதாலும், அவரை அணுகி, தங்களின் கருத்துக்களைப் பகிர்வதற்கு புதுமுக வீரர்கள்கூட தயங்குவதில்லை என்று மல்ஹோத்ரா சொல்வதை கவனிக்க வேண்டியுள்ளது.
உண்மைதான்! சமீப ஆண்டுகளாக கோலி ஒரு பெரிய அரசியல்வாதியாக பரிணமித்துள்ளார். தனக்கு வேண்டாதவர்களை அணியிலிருந்து ஒதுக்குவது, பந்துவீச்சில் முட்டாள்தனமான முடிவுகளை எடுப்பது, தோல்வி கிடைத்தால், உப்புக்கு சப்பில்லாத காரணங்களைக் கூறுவது, பெரிய போட்டிகளின்போது நெருக்கடியான நேரங்களில் சொதப்புவது போன்ற தவறுகளை தொடர்ந்து செய்கிறார்.
எனவே, இவர் இனிமேலும், டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்க தகுதியானவர்தானா? என்பதை அரசியல் மற்றும் ஊழலில் திளைத்த இந்திய அணி நிர்வாகம் யோசித்தால் நல்லது! யோசிக்குமா..!
இங்கிலாந்திற்கு எதிரான இந்தத் தொடர் பதில் சொல்லும் என்று எதிர்பார்க்கலாம்..!