சென்னை: வேட்புமனுவை வாபஸ் பெற வலியுறுத்தி திமுகவினர் மிரட்டுவதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டை வீடு முன்பு சுயேச்சை வேட்பாளர் ஒருவர் திடீரென தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் அமைந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வீட்டின் முன்பு, சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அதைக்கண்ட காவல்துறையினர், அவர்மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த தீக்குளிப்பு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய. இதுதொடர்பாக அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், மதிமுக கட்சியில் உள்ளதாகவும், ஆனால், அங்கு நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளதும் தெரிய வந்தது.
அந்த பகுதியைச் சேர்ந்த திமுகவினர், தன்னை வாபஸ் பெறச்சொல்லி மிரட்டுவதாகவும், அதுகுறித்து, முதல்வரை சந்தித்த முறையிடவே அவரது வீட்டுக்கு வந்ததாக கூறியவர், போலீஸ் பாதுகாப்பு காரணமாக தீக்குளிக்க முயற்சி செய்தாகவும் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்போது இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி, நெஞ்சை பதற வைத்துள்ளது.
இதுகுறித்து, மதிமுக தென்காசி மாவட்டச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன், “வெற்றிமாறன் புகார் கூறியுள்ள பாலகிருஷ்ணன், ஏற்கெனவே ஊராட்சித் தலைவராக இருந்தபோது, மத்திய, மாநில அரசுகளின் விருதுகளைப் பெற்றவர். அவரிடம், தனக்கு ரூ.5 லட்சம் கொடுத்தால் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக வெற்றிமாறன் பேசியுள்ளார். அதற்கான ஆடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது என்று திமுகவைச்சேர்ந்த பாலகிருஷ்ணனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளார்.