சென்னை:

ல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்கள் போராட்டம் இன்று 4வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மருத்துவ பட்ட மேற்படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு, ஊதிய உயர்வு, காலம் சார்ந்த பதவி உயர்வு என பல்வேறு  கோரிக்கைளை நிறைவேற்றக் கோரி, தமிழகத்தில் அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளான  ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை போன்ற மிகப்பெரிய அரசு மருத்துவமனை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் ஒரு பிரிவினர் தொடர்ந்து இரவு பகல் பாராது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.  குறைந்த அளவிலான மருத்துவர்கள் மட்டுமே உள்நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை வழங்கி வருகின்றனர்.

இனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள்  கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல இடங்களில் நோயாளிகள் காத்திருந்து, மருத்துவர்கள் இல்லாததால், நோயாளிகள்  ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

மருத்துவர்களின் ஸ்டிரைக் இன்று 4வது நாளாக நீடித்து வருகிறது. மருத்துவர்களின் போராட்டத்தை உடனே  கைவிடும்படியும், அரசு பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும்படியும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தி  வருகின்றன.