சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் சில மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால்,  கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உதத்தரவிடப்பட்டு இருப்பதாக மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் கொரோனா தடுப்பூசி இருப்பு குறித்து ஆய்வு செய்த  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாம்கள் நல்ல முடிவுகளை கொடுத்துள்ளன. நேற்று நடத்திய  இரண்டாவது கட்ட மெகா தடுப்பூசி முகாமுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. முதல் தடுப்பூசி மெகா முகாமில் 20 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி சுகாதாரத்துறை சாதனை படைத்தது. நேற்று இரண்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கை எட்டி 16 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

மாநிலம் முழுவதும் இதுவரை மொத்தமாக 4.35 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கையிருப்பில் இருக்கும் தடுப்பூசி தீர்ந்து விடக் கூடிய நிலையில் உள்ளது. எனவே கூடுதல் தடுப்பூசி வழங்குமாறு மத்திய அரசிடம் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் கொரோனா பரவலை முற்றிலும் ஒடுக்கும் வகையில்,  கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.