சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், அதிக அளவிலான நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தற்போது, தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், வங்கக்கடலில் புதியதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சென்னையை சுற்றி நல்ல மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நீர் இருப்பை கண்காணிக்கும் பணிகளில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. 24 அடி உயரம் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 22.29 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. இதன் காரணமாக ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று காலை (28ந்தேதி) வினாடிக்கு 200 கனஅடி நீர் திறக்கப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியின் 19 கண் மதகில், 3 ஷட்டர்கள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில், தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால், செம்பரம்பாக்கம் ஏரியின் அணையின் நீர்மட்டம் 22.35 அடி நிரம்பி உள்ளது. அதனால், திறக்கப்படும் உபரி நீர் 1000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சிறுகளத்தூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை,அடையாறு உள்ளிட்ட பகுதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.