சென்னை: தமிழ்நாடு காவல்துறையினரால் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் வரும் டிசம்பர் 2ந்தேதி ஏலம் விடப்பட உள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.  அதன்படி, 35 நான்கு சக்கர வாகனங்கள், 7 இரு சக்கர வாகனங்களை ஏலம் விடப்பட உள்ளது.

இதுதொடர்பான காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  சென்னை, மாநிலக் குற்ற ஆவணக் காப்பகம் மற்றும் தொழில்நுட்பப்பிரிவில் காவல் துறையினரால் பயன்படுத்தப்பட்ட 42 வாகனங்கள் (35 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 7 இரண்டு சக்கர வாகனங்கள்) வரும் 2ம் தேதி அன்று காலை 11.30 மணிக்கு மயிலாப்பூர் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் பொது ஏலத்தில், திறந்த நிலை ஏலம் மற்றும் மூடிய நிலை ஏலத்தில் விடப்படுகிறது.

ஏலம் எடுக்க விரும்புவோர் 1-ஆம் தேதி மாலை 5மணி வரை வாகனங்களை பார்வையிட அனுமதிக்கப்படுவர். காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் வரும் 2-ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 11:15 மணிக்குள் ஏலம் விடும் இடத்தில் முன் பணமாக ரூ.1000 செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும்.

முன் பணத்தொகை செலுத்தும் நபர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனத்தை ஏலம் எடுத்தவுடன், அதற்கான ஏலத்தொகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) முழுவதையும் துறையில் ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். முகவரியுடன் கூடிய புகைப்பட அடையாள அட்டை (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம்) நகலை ஏலத்திற்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.