வயநாடு: ராகுல்காந்தி போட்டியிடும் கேரள மாநிலம்வயநாடு தொகுதியில் தேர்தலை புறக்கணிக்ககோரி மாவோயிஸ்டுகள் நேரடி மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது கேரள மாநில அரசின் கையாலாகாதனத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
வயநாடு தொகுதியில் காங்கிரஸ் எம்பி-யான ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில் கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா களத்தில் உள்ளார்., பாஜக சார்பில் மாநில தலைவர் சுரேந்திரன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
வயநாடு தொகுதியில் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என கிராமம் கிராமமாக சென்று மாவோயிஸ்ட்கள் ஆயுதங்களுடன் மிரட்டல் விடுத்து வருவதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. கேரள மாநிலத்தில் பல பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக நக்சல்கள் ஊடுருவி உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வரும் நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மற்ற மாநிலக்ஙளைச் சேர்ந்த பயங்கரவாதிகளுடன் நக்சல்களும் தொடர்பில் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு (2023) தலப்புழா கம்பமாலாவில் உள்ள கேரள வனத்துறை அலுவலகம் மீது ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நக்சல்கள் என அழைக்கப்படும் மாவோயிஸ்டுகள், பல கிராமங்களில் நேரடியாக சென்று, தேர்தலை புறக்கணிக்கும்படி மக்களை மிரட்டி வருகின்றன.
கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 26ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடையுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று காலை 6 மணி அளவில் வயநாடு தொகுதிக்குட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்ட்கள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பல பகுதிகளில் தேர்தலை புறக்கணிக்க வலியுறுத்தி போஸ்டர்களையும் ஒட்டி உள்ளனர்.
இதுதொடர்பாக கிராம மக்களுக்கும் மாயோஸ்டுகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், தேர்தலை புறக்கணிப்பதால் தங்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை என பொதுமக்கள் மாவோயிஸ்ட்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றனர். பின்னர், அந்த மாவோயிஸ்ட்கள் மக்கிமாலா தேயிலை தோட்ட பகுதிக்குள் நுழைந்து வனப்பகுதிக்குள் மறைந்து விட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதையடுத்து கேரள மாநில போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியை அதிகப்படுத்தி உள்ளனர். மேலும், அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், மிரட்டல் விடுத்த மாவோயிஸ்டுகள் யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களின் பெயர் மொய்தீன், ஆஷிக். சந்தோஷ் ,சோமன் என்று கூறப்படுகிறது.
மாவோயிஸ்ட்கள் பகிரங்க மிரட்டல் விடுத்ததன் காரணமாக வயநாடு தொகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது. மாநில அரசின் கையாலாகாதனத்தால் இன்று மாவாயிஸ்டுகள் ஊருக்குள் வந்து மிரட்டல் விடுக்கும் நிலை ஏற்பட்டு உள்ளதாக எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் பினராயி விஜயன் தலைமையிலான அரசை கடுமையாக சாடி வருகின்றனர்.
வயநாடு தொகுதியில் காங்கிரஸ் எம்பி-யான ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனி ராஜா, பாஜக சார்பில் மாநில தலைவர் சுரேந்திரன் உள்ளிட்டோர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.