சென்னை: வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள பிரபல பொழுதுபோக்கு நிறுவனமான எம்ஜிஎம் குழுமத்துக்கு சொந்தமான  இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று 3வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

பிரபல பொழுதுபோக்கு நிறுவனமான, எம்ஜிஎம் நிறுவனம் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிறுவனம் எம்ஜிஎம் டிஸ்ஸி வேர்டு என்ற பெயரில், பொழுது போக்கு பூங்கா, ஓட்டல், நட்சத்திர விடுதி, மதுபான தொழிற்சாலை, வர்த்தக நிறுவனம், தொழில் நிறுவனம், சரக்கு போக்குவரத்து உட்பட பல்வேறு  தொழில்களை நடத்தி வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா உள்பட வேறு சில மாநிலங்களில் தொழில்நிறுவனங்களை நடத்தி வருகிறது.

இந்த நிறுவனம் முறையாக வரி செலுத்தவில்லை என கூறி, வருமான வரித்துறையினர் கடந்த 15ந்தேதி காலை 7மணி முதல், அந்நிறுவனத்திற்கு சொந்தமான   மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள  அலுவலகம், உரிமையாளர் குடும்பத்தினர் வீடு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டல்களில் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், விழுப்புரம் எல்லீஸ் சத்திரம் சாலையில் உள்ளஎம்ஜிஎம் நிறுவனத்துக்கு சொந்தமான மதுபான ஆலையில் வருமான வரித் துறை அதிகாரிகள் 15 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனைகளின்போது, வரி ஏய்ப்பு தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். ரொக்க பணம், நகைகள், சொத்து பத்திரங்கள், வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள் உட்பட பல முக்கியஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இன்று தொடர்ந்து 3வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். நிறுவன நிர்வாகிகளிடமும் விசாரணை நடடைபெற்று வருவதாகவும், சோதனை முடிந்த பிறகே வரி ஏய்ப்பு குறித்த முழுமையான தகவல் வெளியிடப்படும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

[youtube-feed feed=1]