சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் 37 வங்கிக் கணக்குகள் முடக்கி வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கி நடவடிக்கை எடுத்து பரபரப்பை ஏற்படுத்திய வருமான வரித்துறை தற்போது சென்னை பல்கலைக்கழகத்தின் வங்கி கணக்குகளை முடக்கி உள்ளது.

சென்னை பல்கலை. 2017-18 முதல் 2020- 21 வரை ரூ.424 கோடி வரி நிலுவை வைத்துள்ளதால் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்.
சென்னை பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் இல்லாத நிலையில் உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையிலான குழு நிர்வாகித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சென்னை பல்கலைக்கழகம் வருமானவரியை முறையாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அதன்படி 424 கோடியே 67 லட்சத்து 56 ஆயிரத்து 780 ரூபாய் வருமானவரி நிலுவைத்தொகை செலுத்தப்படாமல் இருக்கிறது. இந்த வரியை வசூலிக்கும் முனைப்பில் பாரத ஸ்டேட் வங்கியில் சென்னை பல்கலைக்கழகத்திற்கு இருக்கும் 37 வங்கிக் கணக்குகளை வருமானவரித்துறை முடக்கியுள்ளது. இந்த கணக்குகளை முடக்கும்படி வருமானவரித்துறை வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளது.
வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் பேராசிரியர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளை, முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.
[youtube-feed feed=1]