கோவை: அமைச்சர் வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வந்த 5 நாற்ள வருமான வரித்துறை சோதனை முடிவடைந்த நிலை யிலும், கோவை திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமார் வீட்டில்  வருமான வரித்துறை 6வது நாளாக தொடர்கிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 3-ந் தேதி முதல் திமுக அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடை பெற்றது. சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், கரூர், கோவை என பல மாவட்டங்களில் உள்ள அமைச்சர் வேலுவுக்கு நெருக்க மானவர் களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.  அமைச்சர் வேலுவீடு மற்றும் முக்கிய இடங்களில் கடந்த   5 நாட்கள் சோதனை நடை பெற்றது. இந்த சோதனை நேற்று (7ந்தேதி) மாலை  முடிவடைந்து. ஆனால், அவருடன் தொடர்புடைய கோவையைச் சேர்ந்த திமுக பெண் பிரமுகர் வீடுகளில் 6வது நாளாக இன்றும் சோதனை தொடர்கிறது.

கோவை இடங்களில் நடந்த சோதனையில் 4 இடங்களில் சோதனை நிறைவு பெற்று விட்டது. திமுக பிரமுகர் கோவை மீனா ஜெயக்குமார் தொடர்புடைய  2 இடங்களிலும் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பார்சன் குடியிருப்பில் வசித்து வருபவர் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளரும், அமைச்சர் எ.வ.வேலுவுக்கு மிகவும் நெருக்கமானவருமான கோவை மீனா ஜெயக்குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு மீனா ஜெயக்குமார் உறவினர் எனக் கூறப்படும் நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் ஜெயக்குமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நிலையில், அமைச்சர் எ.வ.வேலு கோவையில் முதலீடுகள் ஏதும் செய்துள்ளாரா என்ற கோணத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். மீனா ஜெயக்குமார் வீடு மட்டும் அல்லாமல் அவரது மகன் வீட்டிலும் ஐடி ரெய்டு நடக்கிறது.

மேலும், கோவை  சிங்காநல்லூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் எஸ்.எம்.சாமிக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அத்துடன் சவுரிபாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகம், கள்ளிமடையில் உள்ள காசா கிராண்ட் முன்னாள் இயக்குனர் செந்தில்குமாரின் வீடுகளிலும் சோதனை நடந்தது.  இதில் 2 இடங்களில் சோதனை ஒரே நாளில் நிறைவடைந்தது. மற்ற இடங்களில் 4 நாட்களை கடந்தும் சோதனை நடந்தது.

திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமார் வீடு உள்பட 3 இடங்களில் இன்று 6-வது நாளாக கோவையில் சோதனை நடைபெற்று வருகிறது. நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள மீனா ஜெயக்குமாரின் வீடு மற்றும், சவுரிபாளையத்தில் உள்ள அவரது மகன் அலுவலகத்தில் இந்த சோதனை யானது நடக்கிறது. 2 இடங்களிலும் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சோதனையின்போது, பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ள நிலையில், அதுகுறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும்,  சில ஆவணங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையின்போது பல முக்கிய ஆவணங்கள்  கைப்பற்றப் பட்டதாக கூறப்படுகிறது.

மீனா ஜெயக்குமார் குறித்து அமைச்சர் எ.வ.வேலு கூறும்போது, கோவைக்கு செல்லும் போது அரசு விடுதி கிடைக்காத நேரத்தில் அப்பாசாமி கட்டிய ஹோட்டலில் நான் தங்கி உள்ளேன். அப்போது கூட அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த இரண்டு கம்பெனிக்கும் எனக்கும், எனது துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

நீங்கள் சொல்லித்தான் மீனா ஜெயக்குமார் என்பவர் பெயரே எனக்கு ஞாபகம் வருகிறது. ஜெயக்குமார் திருவண்ணாமலையில் பிறந்தவர். சிறுவயதில் கோவைக்கு சென்று அங்கு ரியல் எஸ்டேட் செய்தவர் அங்கே செட்டில் ஆகிவிட்டார். திருவண்ணாமலைக்காரர் என்பதால் அவர் என்னை வரவேற்பது கொலை குற்றமா?; ஆனால் அவரது வணிகத்திற்கும் எனக்கும் தொடர்பு இருக்கிறது என சொல்வது என்ன நியாயம்.

அந்த குடும்பத்தையும் எனது குடும்பத்தையும் தொடர்புப்படுத்தி பேசுவது என்னவிதத்தில் நியாயம். தனிப்பட்ட முறையில் என் நடத்தையை கெடுக்க பலர் முயன்று வருகிறார்கள். ஆனால் நான் மனசாட்சிக்கு பயந்தவனாக என்றைக்கும் நான் இருப்பேன்.

என் வீட்டிலோ, என் மனைவி, பிள்ளைகள் வீட்டிலோ, கல்லூரிகளிலோ ஒரே ஒரு பைசா பறிமுதல் செய்து இருந்தால் கூட நான் பொறுப்பேற்றுக் கொண்டு பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். தொடர்பே இல்லாத நபர் வீடுகளில் எல்லாம் கிடைக்கும் பணத்திற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். அபிராமி ராமநாதன் யார் என்பது எனக்கு தெரியாது என கூறியது குறிப்பிடத்தக்கது.