டெல்லி: வருமான வரி ஏய்ப்பு காரணமாக, டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் இன்று 2வது நாளாகவருமான வரித்துறை சோதனை தொடர்ந்து வருகிறது.
குஜராத் கலவரம் தொடர்பாக சுமார் 20ஆண்டுகளுக்கு பிறகு ஆவணப்படம் வெளியிட்ட இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட பிபிசி நிறுவனம், நாட்டின் பிரதமர் மீது குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தது. இந்த ஆவணப்படத்துக்கு இந்திய அரசு தடை விதித்தது. மேலும் தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021ன் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி பதிவுகளை அகற்றுவதற்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், யூடியூப் மற்றும் டிவிட்டர் உள்பட சமூக வலைதள நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை 2வது நாளாக இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதேபோல் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிபிசி சம்பந்தப்பட்ட சர்வதேச வரிஏய்ப்பு மற்றும் பண பரிமாற்ற முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வருமான வரித்துறை சோதனைக்கு எதிர்க்கட்சிகள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டில்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் ஐ-டி துறை நடத்திய ஆய்வு நடவடிக்கை குறித்து தங்களுக்குத் தெரியும் என்று அமெரிக்கா செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் உலகம் முழுவதும் சுதந்திரமான பத்திரிகையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
“உலகெங்கிலும் உள்ள சுதந்திரமான பத்திரிகையின் முக்கியத்துவத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். கருத்துச் சுதந்திரம் மற்றும் மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உலகெங்கிலும் உள்ள ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு பங்களிக்கும் மனித உரிமைகளாக நாங்கள் தொடர்ந்து முன்னிலைப்படுத்தி வருகிறோம். இது இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்தியுள்ளது” என்று பிரைஸ் கூறினார்.
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், செவ்வாய்கிழமை வரிச் சோதனைகளுக்குப் பதிலளித்த போது, இது தொடர்பான விரிவான தகவல்கள் விரைவில் வழங்கப்படும் என்று கூறினார். “வருமான வரித்துறை அவ்வப்போது ஆய்வுகள் நடத்தி, முறைகேடுகள் கண்டறியப்பட்டதும், கணக்கெடுப்பு முடிந்ததும், அவர்கள் தகவல் கொடுக்கிறார்கள். ஐடியின் இந்த சர்வே முடிந்ததும், அவர்கள் உங்களுக்கு அனைத்து விவரங்களையும் விரிவாகத் தருவார்கள்,” என்று கூறினார்.