சென்னை: கடந்த 5ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள டோல்கள் மூலம் ரூ.1,18,881 கோடி வருமானம் அரசுக்கு கிடைத்துள்ள மத்தியஅரசு தெரிவித்துள்ளது.

சுங்கக்சாவடிகளில் வாகனங்கள் பணம் செலுத்த கால தாமதம் ஏற்படுவதை தடுக்க ஃபாஸ்டேக் திட்டம் கொண்டு வரப்பட்டது. முதன்முதலாக கடந்த 2016-17ம் ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 2020ம் ஆண்டு கட்டாயமாக்கப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில், திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி சோமு. ஃபாஸ்டேக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டண வசூல் அதிகரித்துள்ளதா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மத்திய போக்குவரத்து துறைஅமைச்சர் நிதின்கட்கரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில்,  கடந்த 2016-17ஆம் நிதியாண்டில் நாடு முழுவதும் ஃபாஸ்டேக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அதிலிருந்து ஆண்டுதோறும் சுங்கக்கட்டண வசூல் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“ஃபாஸ்டேக் திட்டம் தொடங்கப்பட்ட 2016-17ஆம் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த சுங்க வசூல் ரூ.17,942 கோடியாக இருந்தது.  2017-18 ஆம் நிதியாண்டில் ரூ.21,948 கோடியாகவும், 2018-19 ஆம் நிதியாண்டில் ரூ.24,396 கோடியாகவும், 2019-20ஆம் நிதியாண்டில் ரூ.26,850 கோடியாக வும், நடப்பு நிதியாண்டில் ரூ.27,745 கோடியாகவும் அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார்.

மொத்தமாக கடந்த ஐந்தாண்டுகளில் ஃபாஸ்டேக் வசூல் மூலம் 1 லட்சத்து 18 ஆயிரத்து 881 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.