திருப்பூர்:

சேலம் ஓமலூரில் பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரேசன் கார்டில், அவரது புகைப்படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வாலின் படம் இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அதே போல சென்னையில் ஒருவர் பெயர் இந்தியில் பதிவாகியிருப்பதை பத்திரிகை டாட் காம் இதழில் வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் குடும்பத் தலைவர் படத்துக்கு பதிலாக விநாயகர், செருப்பு அணிந்த கால், நாய் ஆகியவற்றின் படங்கள் பதியப்பட்டு அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் வடுகபாளையம் ஊராட்சியை சேர்ந்த விவசாயி நல்லசிவம் (47). இவர் குடியிருக்கும் பகுதிக்கான ரேஷன் கடை சுங்காரமடக்கில் இயங்குகிறது.  ஸ்மார்ட் ரேஷன் கார்டு வந்துள்ளதை கேள்விப்பட்ட நல்லசிவத்தின் மனைவி சுமதி, சுங்காரமடக்கு ரேஷன் கடைக்கு சென்று கார்டை வாங்கிப் பார்த்தார். அதில்  குடும்ப தலைவர் புகைப்படம் அச்சிடப்படவேண்டிய இடத்தில் விநாயகர் படம் உள்ளதை பார்த்து அதிர்ந்தார்.   ரேஷன் கடை ஊழியர்களோ, இது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் இ-சேவை மையத்திற்கு சென்று படத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதேபோல தர்மபுரி மாவட்டம் போசிநாயக்கன அள்ளி பகுதியில் மகேஷ் சின்னசாமி என்பவரது ஸ்மார்ட் ரேஷன் கார்டில் குடும்ப தலைவர் புகைப்படத்துக்கு பதிலாக  செருப்பு அணிந்த கால் படம் உள்ளது.  அதே மாவட்டத்தில் இன்னொருவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரேஷன் கார்டில் குடும்ப தலைவரின் படத்திற்கு பதிலாக நாயின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.